பொத்துவில் உப – கல்வி வலயத்தினை தனிக் கல்வி வலயமாக மாற்றவேண்டும் : உதுமான் !

றியாஸ்ஆதம்
பொத்துவில் உப- கல்வி வலயத்தினை பொத்துவில் பிரதேச மக்களின் நன்மை கருதி தனிக் கல்வி வலயமாக மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று பிரதித் தவிசாளர் இந்திர பிரசன்னகுமார் தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்

uthuman
பொத்துவில் உப –வலயத்தினை தனியான கல்வி வலயமாக மாற்றுவதற்கான பிரேரணை முன்னாள் கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க அவர்களினால் கிழக்கு மாகாண சபைக்கு தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு என்னால் ஆமோதிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையில் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தை வழங்குவதற்கான அனுமதியினை கிழக்கு மாகாண சபை வழங்கிய நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலை தொடர்கின்றன.

 
பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு உங்களின் காலத்தில் பொத்துவில் பிரதேசத்திற்கான தனிக் கல்வி வலயத்தினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். பொத்துவில் பிரதேசத்தில் 20 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளது. இப் பாடசாலைகளின் தொகை போதாது என்றால் இன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையில் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ், சிங்களப் பாடசாலைகளையும் இணைந்து பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தை அமைக்கலாம். அதுவும் போதாதென்றால் லகுகல பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்களமொழிப் பாடசாலைகளையும் இணைத்துக் கொள்ளலாம்.

 
ஏனெனில் பாணம,லகுகல ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள சிங்கள மொழிப் பாடசாலைகளின் நிர்வாகத்தினை அம்பாறை நகரில் உள்ள வலயக் கல்வி பணிமனையே மேற்கொண்டு வருகிறது. சுமார் 100 முஆ தூரம் போக்குவரத்து கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை இப் பிரதேச அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பொத்துவில் – இறக்காமம் பிரதேசங்களில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இடமாற்றம் பெற்று கடமைக்காலத்தை முடித்து செல்கின்ற ஆசிரியர்களுக்கு பதிலாக வேறு ஆசிரியர்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.