தமது கோரிக்கைக்கு சபாநாயகரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தை இதே முறையில் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – 08 இலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற பொது எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பியான பந்துல குணவர்தன, மேலும் தெரிவிக்கையில்,
பொது எதிர்க்கட்சியாக செயற்படும் தமக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதங்களில் சரியான நேர ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஜே.வி.பியினருக்கு ஒதுக்கப்பட்ட நேரம்கூட எமக்கு ஒதுக்கப்படவில்லை. எமது உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதை நாம் சபாநாயகரின் கவனத்துக்கும் கொண்டுவந்தோம்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எதிர்க்கட்சித் தரப்பிலுள்ள 38 எம்.பிக்களும் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இருப்பினும், அவரிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை. தற்போதைய நாடாளுமன்றத்தில் தொடர்கின்ற நிலைமையே அடுத்த வருடத்திலும தொடருமாயின், சமையை இதே முறையில் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது.
மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் சிறப்புரிமையைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பு சபாநாயகரிடமே உள்ளது. எனவே, எமது கோரிக்கைக்கு அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
புதிய அரசமைப்பு: நிபுணர் குழுவை நியமிக்க பொது எதிரணி தீர்மானம்
புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து ஆலோசனைகளைப் பெற நிபுணர் குழுவொன்ற நியமிக்க தினேஷ் குணவர்தன எம்.பி. தலைமையிலான பொது எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த நிபுணர் குழுவின் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னரே புதிய அரசமைப்பு தொடர்பாக பொது எதிர்க்கட்சி ஆராயவுள்ளது என அதன் உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பியுமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பு – 08 இலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற பொது எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக பொது எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியளார் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே இந்தக் கருத்தை வெளியிட்ட பந்துல குணவர்தன எம்.பி., மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசமைப்பு உருவாக்க யோசனை எமக்கு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் இன்னும் ஆராயவில்லை. அரசமைப்பு உருவாக்கம் குறித்து ஆராய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரசமைப்பு உருவாக்க விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை அமைக்கவுள்ளோம். இந்தக் குழுவிடம் ஆலோசனை பெற்றதன் பின்னரே எமது கருத்தை வெளியிடுவோம். இது தொடர்பாக நாமும் ஆழமாக ஆராயவேண்டியுள்ளது” – என்றார்.