நிஸ்மி
அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசத்தில் நீண்ட காலமாக பிரதான வீதிகளிலும், சந்தை மற்றும் பஸ்நிலையத்திலும் வாகனமோட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கும் ;இடைஞ்சலாகவும்,வீதி விபத்துக்களுக்குக் காரணமாகவும் திரிந்த கட்டாக்காலி மாடுகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.எம்.சலீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் பிடித்து; பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இக் கட்டாக் காலி மாடுகளை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தி இவைகளை மஹாஓயா மாட்டுப் பண்ணைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதோடு அக் கட்டாக் காலி மாடுகளுக்குச் சொந்தமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நீண்ட காலமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசத்திலுள்ள வாகன சாரதிகள், பாதசாரிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு ஏராளமான வாகன விபத்துக்களுக்கும் காரணமான இக் கட்டாக் காலி மாடுகளை கட்டுப்படுத்தி பொது இடங்கள் மற்றும் பிரதான வீதிகளுக்கு அவை வருவதைத் தடை செய்யுமாறு அக்கரைப்பற்று மாநகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் இக் கட்டாக் காலி மாடுகளின் சொந்தக் காரர்களுக்கு விடுத்த வேண்டுகோள் உதாசினம் செய்யப்பட்டதனால் பொது மக்களின் பாதுகாப்புக் கருதி இந் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோர் இணைந்து இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் பரிசோதகர்; எம்.எஸ்.எம்.சலீம் தலைமையிலான பொலிஸ் கான்ஸ்டபில்களான ஐ.எல்.ஹுஸைன், கே.ஜரீஸ் குமார் உள்ளிட்ட குழுவினர்; இக் கட்டாக்காலி மாடுகளை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 05 மாடுகள் பிடிக்கப்பட்டன.