அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் இலங்கை வருகை !

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின்  தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலராகப் பணியாற்றும், கலாநிதி அமி சீரைட் என்ற உயர்மட்ட அதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை வந்த இவர் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வராவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

Amy_Searight_colombo_001

பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புகள், அமைதிப்படை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக இதன் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் கலாநிதி அமி சீரைட் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது, மனித உரிமைகள் தொடர்பாக சிவில் சமூகத்தினர் தமது கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பணியகத்தின் கீழ், தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலராக கலாநிதி அமி சீரைட் பணியாற்றி வருகிறார்.

Amy_Searight_colombo_002

இவர், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், உள்ள மூத்த அதிகாரிகளுக்கு, பிராந்தியத்தின்  பாதுகாப்பு மூலோபாயங்கள் மற்றும் திட்டங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக, ஆலோசனை வழங்கும் முதன்மை அதிகாரியாக விளங்குகிறார்.

தெற்காசியாவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் தவிர்ந்த, இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் மற்றும், தென்கிழக்காசிய நாடுகள், அவுஸ்ரேலியா, நியூசிலாந்து. பசுபிக் தீவுகள், திமோர் உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளுக்கு பொறுப்பான அதிகாரியாக இவர் பணியாற்றுகிறார்.