சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உயிருடன் உள்ள பிணங்களாக காணப்படுகின்றனர் !

வடபகுதி மக்களின் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக குளிரூட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
harison minister

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களை இழந்துள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

அத்துடன், நுவரெலிய கிழங்கு விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், அவர்களின் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான குளிரூட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கிவரும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கடந்த ஆட்சி காலத்தின் போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உரங்களினால் தற்போது நாட்டில் சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஆண்டொன்றிற்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளரை பராமரிப்பதற்காக சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நிதித் தொகை அரசாங்கத்தினால் செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உயிருடன் உள்ள பிணங்களாக காணப்படுவதாகவும் கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.