பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களினால் எழுப்பப்பட்ட வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், அன்றைய அரசாங்கம் ஜெனீவாவில் செய்த முறையற்ற செயற்பாடுகள் காரணமாக பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், தற்போதைய அரசாங்கம் ஜெனீவாவில் சிறந்த முறையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அறிவை வெளிநாட்டு சேவைகளுக்கு வழங்குவதாகவும், அது அரசியல் ரீதியாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
தூதரக சேவைக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் – பிரதமர்
அரசாங்கம் தூதரக சேவைகளுக்காக தகுதியான நபர்களை நியமித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இலங்கையின் தூதரக சேவை தொடர்பாக கேள்விகள் எழுப்பட்டதுடன் அதற்கான பதில்களும் வழங்கப்பட்டன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கும் போது சற்று ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பதில் எதிர்பார்த்து கேள்வி எழுப்பியதுடன் வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா பதிலளித்தார்.
தூதரக சேவையில் கடமையாற்றுவோரில் 51 வீதமானவர்கள் தொழில் சார்ந்த நபர்கள் எனவும் 49 வீதமானவர்கள் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் எனவும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தூதரக சேவையில் தொழில் சார்ந்த 70 வீதமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அப்படி நியமிக்காது, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் தூதரக சேவையில் ஏன் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போதைய அரசாங்கம் தூதரக சேவைக்கு தகுதியான நபர்களை நியமித்துள்ளது எனவும் கடந்த அரசாங்கம் போன்று தூதுவர்கள் மூலம் வர்த்தகம் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் நியமிக்கப்பட்டுள்ளாரா என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், பதில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி பிரித்தானிய பிரதமருடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளக் கூடியவர் எனவும் தெரிவித்துள்ளார்.