நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜனவரி 18ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.
இதன்போது எவரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது என, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
எனினும் அவர் ஆணைக்குழுவில் ஆஜரான வேளை, அந்த உத்தரவை மீறி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப் பெரும, உதய கம்மன்பில, பந்துல குணவர்த்தன, காமினி லொகுகே, ரோஷன் ரணசிங்க, எஸ்.எம்.சந்திரசேன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக, குருதுவத்த பொலிஸார் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
இதன்படி குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு ஆலோசனை பெறுவதற்காக அது தொடர்பிலான அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இதன்போது பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.