அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் திறந்து வைத்து , வைத்திய உபகரணங்களும் கையளிப்பு!

 

அபு அலா –

கட்டிடங்களை திறந்து வைப்பதன் மூலம் சுகாதார துறையை வளர்ச்சியடைய வைக்க முடியாது அதற்கான வைத்திய உபகரணங்களையும், வைத்தியர்களையும், உத்தியோகத்தர்களையும், ஊழியர்களையும் நியமித்து பொதுக்களுக்கு தேவையாக மருந்து வகைகளையும் வழங்கினால்தான் பொதுமக்களுக்கு சிறந்த சகாதார சேவைகளை வழங்க முடியும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

17_Fotor

சுகாதார அமைச்சரின் விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 20 இலட்சம் ரூபா நிதியில் நாவிதன்வெளி, அன்னமலை கிராமத்திலுள்ள ஆரம்ப பராமரிப்பு வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட அவர சிகிச்சைப் பிரிவை நேற்று (12) திறந்து வைத்த பின்னர் அமைச்சர் அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண சபைக்கு கிடைக்கின்ற நிதிகள் 40 சத வீதமாகவுள்ளதால் இதைக்கொண்டு கிழக்கு மாகாண சுகாதாரத்துறையை முழுமையாக நிவர்த்திசெய்ய முடியாதுள்ளது. இந்நிலைமையில்தான் இத்துறையை பாரிய சவால்களுக்கு மத்தியில் கொண்டு செல்லவேண்டிய நிலைமையுள்ளது. இருந்தும் கிழக்கு மாகாணத்தில் சுகாதார, சுதேச வைத்தியத்துறையை முன்னெடுக்கவேண்டிய பாரிய தேவைப்பாடுகள் சுகாதார அமைச்சருக்குள்ளது. அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு செயற்படவுள்ளேன்.

கல்முனை பிராந்தியத்தில் 12 ஆரம்ப பராமரிப்பு வைத்தியசாலைகள் உள்ளன. அங்கு வைத்திய சிகிச்சைகளைப்பெற்றுவரும் நோயாளர்களுக்கு மேலதிக அவசர சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு இடமாற்றம் செய்ய அதற்கான அம்பியுலன்ஸ் வண்டி இல்லாத பாரிய சவால்களை வைத்தியசாலை வைத்தியர்கள் எதிர்கொண்டும் வருகின்றனர். இவ்வைத்தியசாலைகளுக்கு மிக விரைவில் அம்பியுலன்ஸ் வண்டிகளை வழங்குவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றேன்.

அத்துடன், கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கான வைத்தியசாலைகளையும், அதற்கு தேவையான வைத்திய உபகரணங்கள், தட்டுப்பாடற்ற மருந்து வகைகளையும், வைத்தியர்களையும் நியமிப்பதற்கான சகல முன்னெடுப்புக்களையும் எடுத்துவருகின்ற இதேவேளை 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியதுறையை முன்னெற்றிச்செல்வது தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பித்தும் உரையாற்றவுள்ளேன் என்றார்.

வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் சித்தி ஜாயிஸா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் விஸேட அதிதிகளாக சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹிட், இணைப்புச் செயலாளர் ஜெமில் காரியப்பர், பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம், இணைப்பாளர் ஏ.எல்.அமானுள்ளா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்ட இந்த விழாவின்போது 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான அவசர சிகிச்சைப் பிரிவுக்கான வைத்திய உபகரணங்களையும் சுகாதார அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.