நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் பல்துறை சாதனையாளர் கௌரவிப்பு விழா!

 

 

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் மாணவர்களாக இருந்து பலதுறைகளிலும் முதன்நிலை வகித்து சாதனை படைத்திருக்கும் பல்துறை சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழா நேற்று கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபீர்; தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரியின் பழைய மாணவரும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எம்.ரி.அப்துல் நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.எம்.றபீக், பிரபல தொழிலதிபர் பொறியிலாளர் வை.எல்;.நயீம், முன்னாள் அதிபர்களான எம்.எம்.றகீம், எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன் உள்ளிட்ட கல்விமான்கள், சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த(சாஃத) பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் அனைத்துப் பாடங்களிலும் திறமைச் சித்திபெற்ற மாணவர்கள், கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக் கழகம் நுழைந்துள்ளோர், மாகாண, தேசிய மட்டங்களில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றுள்ளோர், ஜனாதிபதி விருது பெற்றுள்ளோர், பழைய மாணவர்களாக இருந்து கொண்டு உயர் பதவிகளை அலங்கரித்து சமூகத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்தோர் எனப் பல மட்டத்திலுள்ளோரும் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம், பரிசுப் பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘ஒரு பாடசாலைக்கும் பழைய மாணவர்களுக்கும் இறுக்கமான உறவு இருக்கின்றது. அந்த உறவின் அடிப்படையில் இந்தப் பாடசாலை மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று கனவு கண்ட பழைய மாணவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன். ஒரு ஆசிரியனாக, அதிபராக என்ற அந்தஸ்துக்களை விடவும் எங்களுக்குக் கௌரவம் தந்தது பழைய மாணவன் என்பதுதான். இதற்குப்பிறகும் அந்த கௌரவத்தைத்தான் நாங்கள் தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றோம்’ எனத் தெரிவித்தார்.

IMG_8782_Fotor_Collage_Fotor IMG_8782_Fotor