– எம்.வை.அமீர் –
மத்திய கிழக்கிலுள்ள இலங்கை தூதரகங்களில் சில அதிகாரிகளால் மக்கள் மீது தொடரும் அசௌகரிகங்கள் மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றதை அவதானிக்கின்றோம். எமது வரிப்பணத்தில் எமக்கு சேவை செய்வதற்காக அமர்த்தப்பட்டவர்கள் , எமது மக்களையே புறக்கணிப்பதையும் , தரக்குறைவாக நடாத்துவதையும் எவராலும் அங்கீகரிக்க முடியாது என இலங்கை புலம் பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, எமது நாட்டிற்கு பிரதான அந்நிய செலாவனியை பெற்றுத்தரும் தொழிலாளர் வர்க்கத்தை சிவப்பக் கம்பளம் போட்டு வரவேற்பதை விடுத்து , இவ்வாறு மனம் நோகடிப்பதை ஒரு போதும் எம்மால் அனுமதிக்கவும் முடியாது.
சில அதிகாரிகளால் மக்கள் தொடர்ந்தும் சந்திக்கும் அசௌகரிகங்களை அரசாங்கம் இனங் கண்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான புகார்கள், தூதரங்களில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் , நன்மைதிப்பதையும் வெகுவாக பாதிப்பதோடு, எமது நாட்டின் நன்மதிப்பையும் பாதிக்கின்ற தென்பதையும் உரியவர்கள் நன்கு உணர்ந்து செயற்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
உறவுகளை துறந்து பல தியாகத்திற்கு மத்தியில் வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது மக்களுக்கு ஆறுதலாகவும் பாதுகாவலனாகவும் அடைக்கலமாகவும் செயற்பட வேண்டிய எமது தூதரக அதிகாரிகளில் சிலர் வேலியே பயிரை மேய்வது போல் செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பொதுவாக மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தூதரகங்களில் நடைபெறும் அசௌகரிகங்கள், தாமதமான சேவைகள், மட்டுபடுத்தப்பட்ட சேவைக் காலம், சிநேகபூர்வ்ற்ற மக்கள் தொடர்பாடல், போன்ற விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி அதற்கான குறை நிறைகளை பூர்த்தி செய்ய முன் வரவேண்டும் . தொடர்ந்தும் பாரம்பரியமாக நடைபெறும் இவ்வாறான சம்பவங்களை காலகாலமாக அரசாங்கம் கண்டு கொள்ளலாம் இருப்பதும் வருத்த மளிக்கின்றது.
இதற்கு அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென்றும் மேலும், தூதரகங்களுக்கு தேவையான மேலதிக வளங்களை அரசாங்கம் வழங்குவதன் மூலம் கால தாமதமில்லாத, மக்கள் சிநேக, சீரான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குகளில் அரசியல் கட்சிகள் எந்த விதத்திலும் தங்கி இல்லை என்றாலும், எமது உறவுகள் அங்கேதான் இன்னும் இருக்கின்றார்கள் எனும் உண்மையை அரசாங்கமும் அனைத்து அரசியல் வாதிகளும் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.