சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல என சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதுவர் அஸ்மி தக்சிம் கூறினார்.
எதிர்வரும் தினங்களில் குறித்த பெண்ணை சந்திப்பதற்கு தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் தண்டனை தொடர்பில் ரியாத் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேல்முறையீடு தொடர்பில் இன்னும் பதில் வரவில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல கூறினார்.
இதுதவிர குறித்த இலங்கைப் பணிப் பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தளர்த்துவது குறித்து, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையிலுள்ள சவுதி அரேபியத் தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சவுதி அரேபியா மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகம் முன்னால் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சிவில் சமூகப் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதேவேளை சவூதி அரேபியாவில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 50 குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.