125 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெறமுற்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று சுங்க அதிகாரிகளும் பினையில் !

அண்மையில் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெறமுற்பட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று சுங்க அதிகாரிகளும் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகிய மூன்று சந்தேகநபர்களும், கடந்த ஒக்டோபர் 15ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். 

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இவர்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், சந்தேகநபர்களை பிணையில் விடுவிப்பதை எதிர்க்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

இதன்படி மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் விடுவிக்க, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார். 

மேலும் சரீரப் பிணை வழங்கும் மூவரில் ஒருவர் அரச உத்தியோகத்தராக இருக்க வேண்டும் எனவும், சந்தேகநபர்கள் வௌிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் குறித்த வழங்கு எதிர்வரும் பெப்ரவரி 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.