பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் இன்றியும் நம்பத்தகுந்த சாட்சிகள் இன்றியும் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு மனித உரிமை ஆணைக்குழு சட்ட மாஅதிபருக்கு அறிவித்துள்ளது.
இதனைத் தவிர பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் பிரகாரம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீள் பரிசீலனை செய்யுமாறும் ஆணைக்குழு, சட்டமா அதிபரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
வழக்குகளை மீள் பரிசீலனை செய்ததன் பின்னர் நம்பத்தகுந்த சாட்சிகள் இல்லாத மற்றும் சிறு தவறுகள் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறுமாறும் கோரியுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நம்பத்தகுந்த சாட்சிகள் இருக்கும் கைதிகள், நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாலோ அவர்களையும் விரைவில் பிணையில் விடுவிக்க வேண்டும் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.
அத்தோடு கைதிகள் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடு தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய பிரச்சினை தொடர்பில் விரைந்து தீர்வு காண்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் எண்ணியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நபர்களை நீண்டகாலம் தடுத்து, விளக்கமறியலில் வைக்கின்றமை அரசியலமைப்பின் 12 ஆம் 13 ஆம் சரத்துக்கள் அடிப்படையில் மனித உரிமைகளை மீறும் செயலாகும் என மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்திக் கூறியுள்ளது.
அத்தோடு, அத்தகைய செயற்பாடுகள் சர்வதேச சட்டத்தின்கீழ் இலங்கை ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீறும் வகையிலும் அமைந்துள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.