-எம்.வை.அமீர் –
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தொழில் மற்றும் ஏனைய தேவைகளுக்காக உலகம் முழுவதும் வாழும் சுமார் 20 லட்சம் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வசதிகளை நமது அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று தனிநபர் பிரேரணை ஒன்றை கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் சபைக்கு முன்வைத்தார்.
கல்முனை மாநகரசபையின் நவம்பர்மாதத்துக்கான அமர்வு 2015-11-26ம் திகதி மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் நிகழ்ச்சி நிரலின் 7ம் நிகழ்வான “புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் வசதிகள்செய்து கொடுக்கப்படவேண்டும்” என்ற உறுப்பினர் ஏ.ஏ.பஷீரின் உரையில்:
இன்று இந்த சபையில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்களிக்கும் வசதிக்காக ஒரு பிரேரணையை முன்வைப்பதில் ஆத்ம திருப்தி அடைகிறேன் என்றும்,
இந்த நாட்டையும், எமது பிரதேசத்தையும் பொருளாதார ரீதியாக தாங்கி நிற்கும் ஒரு உயிர் நாடி, புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானம் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏறத்தாள 20 லட்சம் இலங்கை புலம் பெயர் தொழிலாளர்கள், மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் நமக்காகவும் , நமது உறவுகளுக்காகவும், பல தியாகத்திற்கு மத்தியில் பல தசாப்தங்களாக தொழில் புரிந்து வருகின்றனர். தனது முழு வாழ்க்கையையும் தனது குடும்பத்திற்காக அர்பணித்தவர்கள். நமது குடும்பங்களில் யாராவது ஒருவர் இன்று வெளிநாட்டில் தொழில்புரியும் ஒரு சூழலை இப்போது காணக் கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
நமக்கெல்லாம் நன்கு தெரியும், கடல்கடந்து சென்று உறவுகைளை பிரிந்து கஷ்டப்படும் இந்த ஏழை தொழிலாளர்கள், பல இன்னல்களுக்கு மத்தியில் தினமும் அங்கேயும் இங்கேயும் பல சமூக பொருளாதார இடர்பாடுகளை சந்தித்த வண்ணம் உள்ளனர். இவர்களுடைய சொல்லொண்ணாத் துயரங்களை நாம், ஊடகங்களிலும், முக நூல்களிலும் தினமும் கண்டு வருந்தாத நாட்கள் இல்லை.
இவர்களுடைய அபிலாசைகள் காலம் காலமாக கிடப்பாற்றில் கிடப்பதை நாம்மால் மறுக்க முடியாது. இதுவரை காலமும் நாம் அரசியலில் இருந்தும் இவர்களுக்காக குரல் கொடுத்தோமா? என்று என்னும் போது குற்ற உணர்வாக உள்ளது.
எமது புலம் பெயர் தொழிலாளர்களுடைய பிரச்சினைகள் இவ்வாறு காலம் காலமாக தீர்க்கப்படாமல் தேங்கி நிற்பதற்கும், மற்றும்இவர்களுடைய அபிலாசைகள் எந்தவொரு அரசாங்கத்தாலும் , அரசியல் கட்சிகளாலும் முன்னுரிமை அளிக்கப் படாமைக்கும் ஒரு முக்கியமான காரணம் உண்டு.
எந்த விதத்திலும் எமது அரசியல் கட்சிகள், புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குளில் தங்கி இல்லை என்பதே அந்த மறுக்க முடியாத உண்மையாகும். வாக்களிக்கும் வசதி எனும் பொறிமுறை இல்லாமையே இந்த புலம் பெயர் தொழிலால சமூகத்தின் இன்னல்களுக்கும் பின்னடைவிற்கும் ஒரு காரணம் என்றே சொல்லவேண்டும்.
ஆகவே வாக்களிக்கும் வசதி என்பது புலம்பெயர் சமூகத்தின் அபிலாசைகளின் திறவுகோல். இதுவே இப் பிரச்சினைகளின் முற்றுப் புள்ளியாகும்.
எனவே இந்த வாக்குரிமை எனும் விடயத்தில் எமது புலம்பெயர் தொழிலாளர்களுக்காக உதவிக்கரம் நீட்டுவது இங்கே வாழும் உறவுகளாகிய எமக்கும் ஆட்சியாளார்களுக்கும் கடமையாகியுள்ளதை உணர்கின்றேன்.
ஆங்காங்கே காலத்திற்கு காலம் சில அமைப்புகளாலும் , அரசியல் வாதிகளாலும் பேசப்பட்டு மறந்திவிடும் ஒரு விடயமாக இந்த தேர்தல் வாக்களிப்பு வசதி என்பதை நாம் அவதானித்திருந்தாலும். இன்று புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிப்பு வசதியை முழுமையாக முன்னிறுத்தி, ரகீப் ஜாபர் என்பவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
இலங்கை புலம் பெயர் தொழிலாளர்கள் கூட்டணி என்கின்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு குரல் கொடுக்கப் படுகின்றமையை ஊடகங்களினுடாக அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. காலம் கடந்தாலும் இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கதாகும்,. தீவிரமாக வலுத்துவரும் இந்த கோரிக்கையை ஒரு தேசிய பேசு பொருளாக்கி, பாராளுமன்றம் வரைக்கும் கொண்டு சென்ற ரகீப் ஜாபரின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். நாம் சிந்திக்காததை எந்த வொரு அதிகாரமும் இல்லாமல் செயற்படுத்தியதற்கு நன்றி கூறுகிறேன்.
ரகீப் ஜாபர் இனால் வழி நடாத்தப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் வாக்குரிமை கோசத்திற்கு ஆதரவாக இந்த சபையும் இணைந்து, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பு வசதியை செய்து கொடுக்க அரசாங்கத்தை கோர வேண்டும் என இந்த சபையை கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
எமது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் வசதி செய்து கொடுக்கப் பட்டால், தேர்தல் வின்ஜாபனங்களினூடாக அவர்களின் அபிலாசைகள் தீர்க்கப்படும் என்கின்ற அளப் பெரிய நம்பிக்கை உள்ளது. மேலும், இந்த நாட்டில் எந்த ஒரு சமூகமும் தனது வாக்குகளை மூலதனமாக கொண்டே தனக்குரிய ஜனநாயக உரிமையையும், அரோக்கியமான சமுக இருப்பையும் உறுதிப்படுத்துகின்றன . அந்த வகையில் , வாக்களிக்கும் வசதி என்பது மூவின புலம்பெயர் தொழிலாளர்களினதும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வித்தாகிவிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே புலம்பெயர் தொழிலாளர்களின் தேர்தல் வாக்களிப்பு வசதியை செயற்படுத்திக் கொடுக்க ஆதரவு அளிக்குமாறு இந்த சபையை மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
ரகீப் ஜாபரின் வாக்குரிமை கோரிக்கை இந்த கிழக்கு மண்ணிலிருந்து ஆரம்பிக்க பட்டிருப்பது இன்னுமொரு சிறப்பம்சமாகும். ஏற்கனவே இந்த நாட்டில் வாழும் இன்னுமொரு பிரதான சிறுபான்மை இனமொன்றிற்கான அரசியல் முகவரி இந்த மண்ணிலிருந்தே விதைக்கப்பட்டு இன்று அது ஒரு விருட்சமாக வளர்ந்ததை நாம் எல்லோரும் காண்கின்றோம். அதே போல இன்னுமொரு 20 லட்சம் தொழிலாளர் சமூகத்திற்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கும் உரிமைப் போராட்டத்திற்கு வலுவூட்டோவும். இதில் இன மத மொழி பிரதேச பேதமில்லாமல் குரல் கொடுத்து ஒரு ஜனநாயக உரிமைக்காக தாகத்தோடு குரல் கொடுக்கும் ஒரு சமூகத்திற்கு உரம் சேர்ப்போம் இலங்கையர் என்ற ஒரே குரலில்.
ஆகவே இறுதியாக…. எமது அரசாங்கம் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்களிப்பு வசதியை தாமதமில்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்று இந்த சபையில் பிரேரிக்கின்றேன். இந்த பிரேரணையை இந்த சபை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் என்பதையும் நமது கல்முனை மாநகரசபையில் பிரேரிக்கப்படும் வரலாற்று முக்கியத்துவமிக்க இப்பிரேரணையை அதிஉத்தம ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கௌரவ முதல்வர் அவர்களையும் கௌரவ பிரதிமுதல்வர் மற்றும் கௌரவ உறுப்பினர்களையும் மிக்க மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறி தனது பிரேரணையை முன்வைத்தார்.
குறித்த பிரேரணையை கல்முனை மாநகர பிரதிமுதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் வழிமொழிந்து உரையாற்றினார். அவரது உரையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த உறுப்பினர்களான எஸ்.ஜெயகுமார் மற்றும் ஏ.எச்.எச்.எம்.நபார் ஆகியோர் வரலாற்று முக்கியத்துவமிக்க இப்பிரேரணை கல்முனை மாநகரசபையில் முன்வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்றும் இந்த விடயம் ஒன்றும் சர்வதேச நாடுகளைப் பொறுத்த வரையில் புதியதொன்றல்ல என்றும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் எதோ ஒரு வகையில் அந்த நாட்டின் புலம்பெயர் மக்களுக்கான வாக்குரிமை செயற்படுத்த பட்டிருக்கிறது. குறிப்பாக பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் கனடா போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாக கூறலாம். இது சம்பநதமாக INTERNATIONAL IDEA எனும் அமைப்பின் 278 பக்க ஆய்வறிக்கை தெளிவாக கூறுகின்றது. என்றும் தெரிவித்தனர்.
பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட முதல்வர் நிஸாம் காரியப்பர் பிரேரணையின் நியாயப்பாடுகளை வலியுறுத்தியதுடன் பிரேரணையின் பிரதிகளை அதிஉத்தம ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் , வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருக்கு மேலதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்குமாறு செயலாளரை பணித்தார்.
பிரேரணை சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.