மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராயவென மாவட்ட அரசாங்க அதிபரால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
இந்தக்குழுவில், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளுர் உற்பத்தியாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்குகின்றனர்.
நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறு உற்பத்திகளை மேம்படுத்துவது சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில், கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள், அதிகாரிகளுக்கு சிறு கைத்தொழில் தொடர்பான பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த விளக்கங்களை அண்மையில் அவுஸ்திரேலிய நாட்டுக்கு சிறு கைத்தொழில் தொடர்பான பயிற்சிகளுக்காக சென்று வந்த மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியிலான மாவட்ட அபிவிருத்தித்திட்டத்தின் ஆலோசகரான கலாநிதி ரி.ஜெயசிங்கம், சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் வழங்கினர்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு சிறு கைத்தொழில்களின் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து ஆராயப்பட்டதுடன் தொடர்ச்சியாக இது தொடர்பிலான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.