மன்னார் – சிலாவத்துறை பகுதியில் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இரகசியத் தகவலின் பிரகாரம் கடற்படையினரும், மதுவரித் திணைக்கள அதிகாரிகளும் கூட்டாக நடத்திய தேடுதலின்போது இன்று காலை இந்த கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
சிலாவத்துறை காட்டுப் பகுதியில் நடத்திய தேடுதலில் 120 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
கஞ்சா கடத்தல் தொடர்பில் நேற்றிரவு முதல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாப் பொதிகள் மதுவரித் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
இதேவேளை, இந்த கஞ்சாத் தொகையை நாளை ஏ அறிக்கையுடன் மன்னார் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி த.நந்தகுமார் கூறினார்.