சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து இன்று தீர்மானிக்க இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்ட போதிலும் இதுவரை எவரும் விடுதலை செய்யப்படவில்லை.
எவ்வாறாயினும் இது தொடர்பாக நீதியமைச்சரிடம் எமது செய்திப்பிரிவு வினவியதற்கு, இன்று தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என்று நீதியமைச்சர் பதிலளித்திருந்தார்.
அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதா? அல்லது புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் 29 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்ததுடன், இன்று அவர்களுடன் சேர்த்து 50 கைதிகள் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இதுதவிர மெகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் அங்கு விஜயம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.