மறைந்த சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் பிரதம குருவுமான மாதுலுவாவே சோபித தேரரின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதற்கு பிரதமர் தீர்மானித்திருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அச்சிடப்படும் புத்தகத்தை அடுத்த வருடம் நாடு முழுவதிலும் உள்ள வாசிகசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு விநியோகம் செய்வதற்கு பிரதமரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சோபித தேரரின் இறுதிச் சடங்கை மேற்கொள்வது பற்றிய கூட்டம் ஒன்று அமைச்சரின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரின் இறுதிச் சடங்கிற்கான அனைத்து செலவினங்களையும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பொறுப்பேற்கும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் சோபித தேரருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அரச நிறுவனங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.