புரோகிராமிங் செய்யப்பட்ட எங்கள் ரோபோ வாழ்வு எப்போது முடியுமோ..??

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்

3367_1dubailabor_008

வேலை நாட்களில் அதிகாலையில் அவசர அவசரமாக எழுந்து குளித்து உடையணிந்து உணவுண்டு எட்டு மணிக்கெல்லாம் அலுவலகம் சென்றாக வேண்டும்….எனக்கு எட்டு மணிக்குத்தான் வேலை என்னைப் போன்ற புரோகிராமிங் செய்யப்பட்ட வேறு சில ரோபோக்கள் அதிகாலையில் ஐந்து மணிக்கே செல்ல வேண்டும்.

காலை எட்டு மணியிருந்து மாலை ஆறு மணி வரை அலுவலகத்தில் பல அலுவல்களைப் பார்த்து விட்டு இருப்பிடம் சென்று இரவு உணவுக்கான சமையல் வேலைகளை ஆரம்பித்து சாப்பிட்டு விட்டு இணையத்தில் கொஞ்சம் உலா வந்த பின்னர் துாக்கம்.

பின்னர் காலையில் எழுந்ததும் வார நாட்களில் செய்யும் அதே வேலைகள் மீண்டும் ஆரம்பம்.

வெள்ளிக்கிழமைகளில் நிறைய துாக்கம் பின்னர் துணிமணிகளைக் கழுவுதல், சமையலுக்கான ஏற்பாடுகளைச் செய்தல், வீட்டாரோடும் நண்பர்களோடும் தொலைபேசியல் உரையாடுதல் மற்றும் மிகுதி நேரத்தில் இணையத்தில் உலாவருதல் அதோடு வெள்ளிக் கிழமையும் முடிந்து போய்விடும்.

காலையிலிருந்து மாலை வரை வேலை செய்வதோ, சமைப்பதோ, துணிமணிகளை துவைப்பதோ இவை எல்லாம் ஊரில் இருந்தால் கூட செய்ய வேண்டிய வேலைகள்தான் அவைகள் ஒன்றும் நாங்கள் வெறுக்கும் வேலைகள் அல்ல ஆனால் நடுவில் மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட எந்த சந்தோசங்களும்-துக்கங்களும் எங்களுக்கு கிடைப்பதில்லை.

dubai-labour

01. உம்மா-வாப்பாவோடு அமர்ந்து உணவு உண்பது.

02. அவர்களை அருகில் இருந்து பார்த்துக் கொள்வது.

03. சகோதர சகோதரிகளின் பிள்ளைகளோடு கொஞ்சி விளையாடுவது, அவர்களை சைக்கிளில் சந்திக் கடைக்கு ஏற்றிச் சென்று சுற்றி வருவது.

04. மனைவியோடு பல காதல் கதைகள் பேசுவது, அன்பாக கட்டியணைப்பது முத்தமிடுவது.

05. பிள்ளைகள் வாப்பா வாப்பா என்று நம்மையே சுற்றி வருவது அவர்களை பாடசாலைக்கு கூட்டிச் சென்று விடுவது. பாடசாலை முடிந்த பின்னர் ஏற்றி வரச் செல்வது.

06. சொந்தபந்தங்களில் வீடுகளுக்கு சென்று அவர்களை நலன் விசாரிப்பது. அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது.

07. நண்பர்களோடு ஊர் சுற்றித் திரிவது, பல கதைகள் பேசுவது.

08. வெள்ளிக்கிழமையானால் நண்பர்களோடு ஆற்றுக்கு குளிக்கச் செல்வது. அப்பப்போ வயல்வெளிகளில் சாப்பாட்டுக்குச் செல்வது.

09. வெள்ளிக்கிழமை நமது ஊர்ப் பள்ளிவாசலில் காதுக்கு இனிமையாக நமது தாய் மொழியில் மார்க்க சொற்பொழிவு கேட்பது.

10. கண்னுக்கு குளிர்ச்சியான நமது ஊர் வயல்வெளிகள், ஆறுகள், புல்வெளிகளைப் பார்ப்பது.

11. அடை மழை காலங்களில் வீட்டில் இருந்து கோதுமை ரொட்டி சுட்டுத் திண்பது, சோளம்-கச்சான்-மரவள்ளிக் கிழங்கு அவித்து திண்பது.

12. நம் ஊர் சந்தையில் துடிக்க துடிக்க மீன் வாங்கி வந்து மனைவியிடமோ அல்லது தாயிடமோ கொடுப்பது.

13. பக்கத்து வீட்டுக்கார பிள்ளைகளை கூட்டி வந்து பாடங்கள் சொல்லிக் கொடுப்பது.

14. பக்கத்து வீட்டுக் கார லாத்தாவின் நெல்களை குற்றுவதற்கு சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போய் கொடுத்து உதவி செய்வது.

15. மரண வீடுகளுக்குச் சென்று ஆறுதல் சொல்வது.

16. திருமண வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்கள் சொல்வது.

17. பெருநாள் தினங்களில் பெருநாள் ஆடைகளுக்காக ஊரில் இருக்கும் அத்தனை கடைகளையுமே புரட்டியெடுப்பது.

18. பெருநாள் தினத்தை குடும்பத்தோடு கொண்டாடுவது.

19. காதல் மனைவியின் பிரசவத்தை கூட இருந்து பார்த்துக் கொள்வது.

20. பிறந்து வந்த என் செல்லக் குழந்தைக்கு சின்னச் சின்ன சட்டைகள் வாங்குவது.

21. மாலை நேரம் பக்கத்து தெரு சீவல் கடையில் சூப்புக் குடிப்பது, கிழங்குச் சீவல் சாப்பிடுவது.

இப்படி மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட எந்தவித சந்தோசங்களும், துக்கங்களும் இல்லாத புரோகிராமிங் செய்யப்பட்ட ரோபோ வாழ்வைத்தான் வெளிநாட்டில் இருக்கும் நாம் வாழ்கின்றோம்.

01. எப்போது முடியுமோ எங்கள் வீட்டுக் கடன்..???

02. எப்போது முடியுமோ எங்கள் தங்கையின் வீட்டு வேலை…???

03. எப்போது முடியுமோ என் மகளின்-மகனின் படிப்பு…???

04. எப்போது முடியுமோ என் பெண் பிள்ளைகளின் திருமணம்…???

05. எப்போது மீட்டெடுப்பேனோ வங்கியில் இருக்கும் உம்மாவின் நகைகளை, மனைவியின் நகைகளை ???

06. எப்போது நான் சேர்ப்பேனோ மச்சானுக்கான சீதனக் காசை..???

07. எனது வாகணத்திற்கான பினான்ஸ்சை எப்போது கட்டி முடிப்பேனோ…???

08. எப்போது நான் கட்டும் சீட்டுக்கள் முடியுமோ…??

“காலையிலும் வண்டி வரும் மாலையிலும் வண்டி வரும் எங்கள் வாழ்க்கை ஓடுதிங்கு நாலு டயர் சக்கரத்தில்“