புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்திரேலியக் கொள்கைகள் குறித்து உலக நாடுகள் சில கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
படகு மூலம் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பாமல் கடலோர காவல் அரண்களை ஏற்படுத்தி தடுக்க வேண்டுமென அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியன அவுஸ்திரேலியாவை வலியுறுத்தியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு மற்றும் நவுரு தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடையே இலங்கையர்கள் பலரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய தடுப்பு முகாமொன்றிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததையடுத்து கிறிஸ்மஸ் தீவுகள் மற்றும் நவுரு தீவுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் நோர்வே, பிஜி, கனடா, ஜேர்மன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கொள்கையினை விமர்சித்துள்ளன.
மேலும், அவுஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள், அவர்களுக்கான சலுகைகள் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், அவுஸ்திரேலியா மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்நாடு இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது