ஜவ்பர்கான்
முஸ்லிம்களை பாதுகாப்பதற்காகவே புலிகள் வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றினர் என்பது உண்மையாயின் அவர்களின் முழு உடமைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு வெறும் 500 ரூபாவுடன் வெளியேற்றியதுதான் பாதுகாப்பா என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கேட்டுள்ளார். இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையில் அவர் மேலும் தெரிவித்ததவது,
வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது இனச்சுத்திகரிப்பே தவிர வேறில்லை. ஓர் இனத்தை முழுவதுமாக வெளியேற்றியது மட்டுமன்றி அவர்களின் உடமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டதன் மூலம் இதுவொரு மோசமான இனச்சுத்திகரிப்பாகும். இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்காத அனைத்து தமிழ் மக்களும் வெட்கித்தலை குணிந்தே ஆக வேண்டும்.
முஸ்லிம்களை வெளியேற்றியமை அவர்களுக்கு பாதுகாப்பாயின் புலி பயங்கரவாதிகளை அரசாங்கம் விடுதலை செய்யாமல் தற்போதும் சிறையில் வைத்திருப்பது அவர்களின் உயிர்களை பாதுகாக்கவே என அரசு சொல்லுமாயின் அதனை அரிய நேந்திரன் ஏற்பாரா என்று கேட்கிறோம்.
அத்துடன் பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் புலிகளிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்கவே முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களுக்கெதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அரிய நேந்திரன் கூறுவதன் மூலம் அவருக்கு இந்த நாட்டின் யுத்தகால வரலாறு தெரியாது என்பது புலனாகின்றது. 1990ல் பிரேமதாசவின் அரசும் புலிகளும் தேனிலவு உறவாடிக்கொண்டிருக்கும் போதுதான் கல்முனை காத்தான்குடி போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களை புலிகள் சிறைப்பிடித்து சித்திரவதை செய்தனர்.
அவர்களில் பலருக்கு என்ன நடந்தது என்று இது வரை தெரியவில்லை. இதற்கு எதிராக பிரேமதாச அரசு எத்தகை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே கால பகுதியிலேயே வடக்கில் பல முஸ்லிம்கள் சிறைபிடிக்கப்பட்டதுடன் சிலர் புலிகளால் கொல்லப்பட்டனர். புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளின் போது மௌனமாக இருந்த பிரேமதாச அரசு முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கியது என்பது அர்த்தமற்ற கூற்றாகும்.
உண்மையில் புலிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களின் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் 1985 முதலே ஆரம்பமாகி விட்டன. இதன் காரணமாக அக்கரைப்பற்று சம்பவம், காரைதீவு சம்பவம், உண்ணிச்சை கிராம முஸ்லிம்களை பாதுகாப்பு தருகிறோம் வெளியேறவேண்டாம் பாதுகாப்பு தருகிறோம் என கூறி மொத்தமாக அவர்களை எரித்தது, வியாபாரத்துக்காக சென்ற முஸ்லிம்களிடம் அவர்களிடமிருந்த ஐயாயிரம் ரூபாவுக்காக அவர்களை கொலை செய்தமை போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த வேளைகளில் பிரேமதாச அரசு இருக்கவுமில்லை முஸ்லிம் ஊர்காவற்படையினர் நியமிக்கப்பட்டிருக்கவுமில்லை என்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியநேந்திரனுக்கு தெரியாமல் போய் விட்டதா அல்லது அவர் உண்மையை மறைக்கிறாரா?
ஆக வட மாகாண முஸ்லிம்கள் அனைத்து உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்ட பின் வெளியேற்றப்பட்டமை பாரிய இனச்சுத்திகரிப்பாகும். இதனை வட மாகாண தமிழ் மக்கள் உணர்ந்து அம்மக்களிடம் கொள்ளையடித்த அனைத்தையும் மீள வழங்கி அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள குடியேற்ற நடவடிக்கை எடுப்பதே தமிழ் மக்களின் தனிப்பண்பை எடுத்துக்காட்டுவதாக அமையும்.