பி.எம்.எம்.ஏ.காதர்
தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் அண்மையில் காலம் சென்ற இலங்கை முஸ்லிம் அறிஞரும், பன்னூல் ஆசிரியரும் முஸ்லிம் சமய கலாசார விவகார முன்னாள் செயலாளருமான சாய்ந்தமருது எஸ்.எச்.எம். ஜமீல் அவர்களின் நினைவு தின உரையும் அவரின் ஆக்கங்கள், வாழ்க்கை நினைவுகள் பற்றிய கண்காட்சியும் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி பி.ப 2 மணிக்கு இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியக் கற்கை அரபுமொழி பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறுவுள்ள இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். பேராதனைப்பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் துறை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அறிஞர் ஜமீல் பற்றிய நினைவுரையை நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வு பற்றிய அறிமுக உரையை முதுநிலை விரிவுரையாளர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் வழங்கவுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரஃப் ஞாபகார்த்த நூல் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறிஞர் ஜமீல் அவர்களின் நூல்கள் தொகுப்புக்கள், அன்னாரின் வாழ்க்கை, வரலாறு, உரைகள் அடங்கிய கண்காட்சியும் இதே தினத்தில் நூல் நிலையத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இப்பிரதேச கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள், ஜமீல் அவர்களின் குடும்பத்தினரும் ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முது நிலை விரிவுரையாளர்களான கலாநிதி எம்.ஐ.எம். ஜஸீல், எம்.எஸ்.எம். ஜலால்தீன், நூலகர் றிபாய்தீன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.