வெள்ள நீரினால் அட்டாளைச்சேனை பிரதேசம் மூழ்கும் அபாயம்!

 

அபு அலா –

 

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மழை நீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்ட வடிகான்கள் யாவும் மழை நீர் வடிந்தோட முடியாமல் நிரம்பி வழிகின்றதால் அப்பிரதேசம் மழை நீரினால் மூழ்கி வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மாகாணத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அறிவித்தல் விடுத்திருந்தார். அந்த அறிவித்தலில் எதிர்வரும் காலம் மழைகாலம் என்பதால் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களும் தங்களின் பிரதேசத்திலுள்ள வடிகான்களை சுத்தப்படுத்தி மழை நீர் வடிந்தோடுவதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

 

அவ்வாறு குறிப்பிட்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் எவ்விதமான வேலைகளையும் இற்றைவரை (25.10.2015) முன்னெடுக்காமல் அசமந்தப்போக்கில் இருந்துவருகின்றனர் எனவும் தற்போது மழைகாலம் ஆரம்பித்து மழைபெய்து வருவதால் தங்களின் பிரதேசத்திலுள்ள வடிகான்கள் முழுவதும் முற்றுமுழுதாக மழை நீரினால் நிரம்பி வழிந்து அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பல பகுதிகள் இன்று வெள்ளநீரினால் முழ்கும் அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றது என்றும் அட்டாளைச்சேனை பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

1_Fotor_Collage_Fotor

 

இதேவேளை, வடிகானூடாக மழை நீர் வடிந்தோட முடியாமல் பாடசாலைகள், வைத்தியசாலை போன்ற அரச நிறுவனங்களும் நீரில் முழ்கும் ஆபத்தையும் எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்ட நிறுவனத்தின் தலைவர்களும் தங்களின் கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

 

அத்துடன் மேற்குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டி கிழக்கு மாகாண ஆளுணருக்கும், முதலமைச்சருக்கும், முதலமைச்சின் செயலாளருக்கும், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச பொதுமக்களினால் கையொப்பமிடப்பட்ட முறைப்பாட்டு கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.