அபு அலா
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று (23) வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
இந்தக் கவனஈர்ப்பு நடவடிக்கையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எல்.யாசிர் ஐமன் உள்ளிட்ட பல பிரமுகர்களுடன் பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு எழுதப்பட்ட வாசகங்களை ஏந்தி நின்றனர்.
குறித்த பதாதைகளில் ‘நல்லாட்சி அரசே 25 வருட அவல வாழ்க்கைக்கு விடிவில்லையா, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்து, விரட்டியடிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் வாழ்வுக்கு விடிவு எப்போது போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
சுமார் அரை மணித்தியாலயம் வரை இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 1990 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாத இறுதியில் வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டு இன்றுடன் கால் நூற்றாண்டை தாண்டிச் செல்லும் நிலைமையில், அம்மக்களின் மீள்குடியேற்றம் ஒரு கேள்விக்குறியாகவும் உள்ளது. அதனை இந்த நல்லாட்சி அரசாங்கம் அம்மக்களின் மீள் குடியேற்றத்தினை உடனடியாக துரிதப்படுத்தவேண்டும் எனக் கோரியே இந்த கவனஈர்ப்பு நடவடிக்கையில் அட்டாளைச்சேனை மக்கள் இன்று ஈடுபட்டுள்ளனர்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக இன்று நாடு பூராகவும் முஸ்லிம் மக்கள் பாரிய கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஓர் அழுத்த்த்தை கொடுக்கும் வகையிலும் ஈடுபட்டுள்ளனர்.
எனவே வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அம்மக்களின் பக்கம் கவனத்தை செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவேண்டும். எமது முஸ்லிம் சகோதரர்கள் இவ்வாறு அகதிகளாக இருப்பதை எம்மால் இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.