எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இப்பல்கலைக்கழகம் 24 மணிநேரமும் விழித்துக்கொண்டிருக்கவேண்டும் என்று கனவு கண்டார் !

எம்.வை.அமீர் 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் அமைந்துள்ள விஞ்ஞான நூலக சேவைகள் 23ம் திகதி ஒக்டோபர் 2015 இல் பிரயோக விஞ்ஞான பீட புதிய நிருவாகக் கட்டடத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

1_Fotor

பல்கலைக்கழக நூலகர் எம்.எம்.றிபாயுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஞ்ஞான நூலகத்தை வைபவ ரீதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் திறந்து வைத்தார். 

 2_Fotor

நிகழ்வுக்கு விசேடஅதிதிகளாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா, பதில் நிதியாளர் கே.எல்.எம்.நசீர் ஆகியோரும் பல்கலைக்கழக நிர்வாக உயர் அதிகாரிகளும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

 5_Fotor

பல்கலைக்கழக ஸ்தாபக நாளைக் கொண்டாடுமுகமாகவும் முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகருமான மர்ஹும் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் சேவைகளை நினைவு கூருவதற்காகவும் பல்கலைக்கழக நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரில் இவ் அங்குரார்ப்பண வைபவமும் ஒரு நிகழ்வாகும்.

 

இப்புதிய நூலகத்தில் முதலாவது அங்கத்தவராக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அத்துடன் புத்தகம் ஒன்றும் இரவல் வழங்கப்பட்டு நூலக சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 8_Fotor

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் மர்ஹும் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இப்பல்கலைக்கழகம் 24 மணிநேரமும் விழித்துக்கொண்டிருக்கவேண்டும் என்று கனவு கண்டார். நாம் அவருக்குச் செய்யும் கௌரவம் அவரது கனவுகளை நிறைவேற்றுவதுதான் அதற்காக எல்லோரும் உழைக்க வேண்டும் என்றும் தலைவர்கள் மரணிப்பதில்லை அவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய உபவேந்தர், பிரயோக விஞ்ஞான பீடத்தில் அமைந்துள்ள இந்த விஞ்ஞான நூலகத்தின் அபிவிருத்திக்கு வேண்டிய சகல பங்களிப்புக்களையும் செய்வதாகவும் தெரிவித்தார்.

 

இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக நூலகர் எம்.எம்.றிபாயுதீன், மர்ஹும் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை இப்பிரதேசத்தில் உருவாக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துப் பல தியாகங்களையும் புரிந்தவர் என்றும்  இது இலங்கை முஸ்லிம்களின் கல்வி புரட்சியில் ஒரு மைல்கல்லாகும் என வர்ணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். 

a_Fotor

விஞ்ஞான நூலகத்தின் தலைவரும் சிரேஷ்ட உதவி நூலகருமான முஹம்மது மஜீட் மஷ்றூபா ஹமீம் தனது உரையில், விஞ்ஞான நூலகம் என்பது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தின் ஓர் பிரிவாகும் என்றும்  இவ்விஞ்ஞான நூலகம் பிரயோக விஞ்ஞானபீடத்தின் பாடவிதானத்துக்குட்பட்ட ஏறக்குறைய 25000 நூல்களையும், தேவையான பொதுஅறிவு, பொழுதுபோக்குசார்ந்த நூல்களையும், இரசாயனவியலில் தந்தை என வர்ணிக்கப்படும் பேராசிரியர் சுல்தான் பாவா அவர்களின் அரிய சேகரிப்புகளையும் கொண்டிருப்பதுடன் பல நவீன வசதிகளையும் இலத்திரனியல் வளங்களையும் கொண்டுள்ளது என்றும் வாசகர் உதவிசேவைகள் மூலம் நூலகவளங்களின் பாவனையை அதிகரிப்பதே எமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.