பி.எம்.எம்.ஏ.காதர்
உணவு மாதிரி பரிசோதனையை துரிதமாக மேற்கொள்வதற்கு வசதியாக கிழக்கு மாகாணத்திற்கு தனியான உணவு மாதிரி பரிசோதனை ஆய்வு கூடம் ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து முக்கிய கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் (19-10-2015)திங்கள் கிழமை நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கே.கருனாகரன,; கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம்,ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் முன்னாள் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு உதவிப் பணிப்பாளர் எஸ்.நாகையா,உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு பிரதம உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.ரி.அபுதாலிப் ஆகியோர் கலந்த கொண்டனர்.
இலங்கையில் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுப்பாதுகாப்பு ஆலோசனை சபையின் செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் விஸ்தரிப்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. ஆசியா மன்றத்தின் உள்ளுர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளுராட்சி திணைக்களங்களின் ஒருங்கிணைந்து ஏற்பாட்டில் எவ்வாறு இதனை எதிர்காலத்தில் அமுல்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்து.
இதற்கு அமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சரும,; கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் 120 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த உணவு மாதிரி பரிசோதனை ஆய்வு கூடம் அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.