ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான தொடர்புகளை துண்டித்துவிட்டு தனித்து போட்டியிட தீர்மானம் !

எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தரப்பு தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் இல்லத்தில் நேற்றைய தினம் இரவு இது தொடர்பில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

 

AVN27_RAJAPAKSA_19951f
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான தொடர்புகளை துண்டித்துவிட்டு தனித்து போட்டியிடுவது என தீர்மானித்துள்ளனர்.
கெஸ்பேவ பிரதேசத்தில் அமைந்துள்ள லொக்குகேவின் இ;ல்லத்தில் இந்த இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச மற்றும் சிலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
புதிய கூட்டணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளை உள்ளடக்கி போட்டியிடும் என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு விசுவாசமான பெருந்தொகையிலான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இந்த புதிய கூட்டணி ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான கட்சியின் முக்கிய பொறுப்புக்களை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு வழங்குவதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்ததனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
அடிமட்ட சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் மஹிந்தவையே ஆதரிப்பதாகவும் இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை இலகுவில் தமது தரப்பு தோற்கடிக்கும் என மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.