நிஸாம் காரியப்பரின் ஜெனீவா கருத்தை பிரதிபலிக்கும் சயீட் அல்-ஹுஸைன்!

அஸ்லம் எஸ்.மௌலானா
ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் வலியுறுத்திய கருத்துகளை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஐ.நா.வில் பிரதிபலித்துள்ளார் என தென்கிழக்கு முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.
Presentation1
இவ்விடயம் தொடர்பில் அந்த பேரவை இன்று வெள்ளிக்கிழமை (02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த கூட்டத் தொடர் ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெற்ற போது சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டதுடன் மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை நிலைவரம் தொடர்பிலான Side Event எனும் பிரத்தியேக அமர்வில் அவர் “இலங்கையில் கடந்த காலங்களில் சிறுபான்மையினர் மீது மத, கலாசார ரீதியாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள்” குறித்து உரையாற்றியிருந்தார்.
இதன்போது பொதுபல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களினால் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்கல் வன்முறைகள் மற்றும் அவற்றின் பின்னணிகள் குறித்து மிகவும் காட்டமான கருத்துகளை அவர் முன்வைத்திருந்தார். குறிப்பாக பேருவளை, அளுத்கம முஸ்லிம்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்களை அடக்குவதற்காக அவர்களது பொருளாதார மையங்களை இலக்கு வைத்து அழிப்பதற்கு பொதுபல சேனாவை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தியது என்பதை அவர் தரவுகளுடன் சுட்டிக்காடி விபரித்திருந்தார்.
பொதுவாக பொதுபல சேனா உள்ளிட்ட சிங்களப் பேரினவாத இயக்கங்களின் முஸ்லிம் விரோத இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் மறைமுகமாக அனுசரணை வழங்கி வந்தது என்றும் அதனால் அப்பேரின இயக்கங்களினால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன்முறைகளைக் கூட கட்டுப்படுத்துவதற்கோ சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கம் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
“தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வியக்கங்கள் அமைதியாக இருந்தாலும் கூட எதிர்காலங்களில் அவை மீண்டும் தலைதூக்கமாட்டா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை எனவும் ஆகையினால் கடந்த கால சம்பவங்களுக்காக பொது பல சேனா போன்ற இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அப்போதுதான் எதிர்காலங்களில் அவற்றின் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்ட அவர், இதற்காக இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பலமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என நிஸாம் காரியப்பர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த அமரவைத் தொடர்ந்து அதற்குத் தலைமை வகித்த ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுவின் விசேட தூதுவர் ஹைனர் பீல்ட்பெல்டை நிஸாம் காரியப்பர் அவர்கள் பிரத்தியேகமாக சந்தித்து உரையாடியதுடன் நிலைமைகளை நேரடியாக ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
இலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத ரீதியான நெருக்குவாரங்கள் தொடர்பில் சர்வதேசத்தினதும் ஐ.நா.வினதும் கவனத்தை ஈர்ப்பதற்காக அன்று நிஸாம் காரியப்பர் மேற்கொண்ட இம்முயற்சிகள் வீண் போகவில்லை என்பது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சயீத் அல் ஹுசைன் அவர்கள் நேற்று முன்தினம் ஜெனீவா மாநாட்டில் ஆற்றிய விசேட உரையின் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
அதாவது ஜெனீவாவில் நிஸாம் காரியப்பர் முஸ்லிம்கள் தொடர்பில் எந்தெந்த விடயங்களை குறிப்பிட்டு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினாரோ அதே விடயங்களை குறிப்பிட்டு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சயீத் அல் ஹுசைன் தனதுரையில் கோடிட்டுக்காட்டி அழுத்தம் கொடுத்துள்ளார். என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
இதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றபோது, இங்கு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தையும் உள்ளடக்கியே தீர்வுகள் முன்மொழியப்பட வேண்டும் என்பதற்கான அத்திபாரம் இடப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூற முடியும்.
எவ்வாறாயினும் அது இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே நாம் முஸ்லிம் தலைமைகளிடம் விடுக்கும் வேண்டுகோளாகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.