அபு அலா
அம்பாறை மாவட்ட ஒலுவில் பிரதேச அஷ்ரப் நகரில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தேசிய சுதேச மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் மேற்கொண்டுள்ளதாக சுதேச மருத்துவ அபிவிருத்திக்குப் பொறுப்பான விஷேட இணைப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் இன்று (01) தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த தேசிய மருத்துவ மூலிகைத் தோட்டம் மிக விரைவில் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள சுதேச மருத்துவத் துறையிலுள்ளவர்கள் சுதேச மருத்துவம் தொடர்பில் மேலதிக அறிவை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் தேசிய ரீதியில் சுதேச மருத்துவத்துக்கு தேவையான மூலிகை வகைகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொண்டு இத்துறைக்கு தேவையான மருந்து வகைகளை உற்பத்தி செய்ய ஏதுவாகவும் அமையும்.
விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத் துறையை முன்னெற்றப் பாதைக்கு இட்டுச்சொல்ல இத்திட்டம் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேசமும் இல்லை. அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 100 இற்கு மேற்பட்ட படித்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவ மூலிகைத் தோட்டம் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைப்பெறுவது இதுவே முதற்தடவை என்பதாகவும் சுதேச மருத்துவ அபிவிருத்திக்குப் பொறுப்பான விஷேட இணைப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.