நீதியமைச்சினால் வடக்கு மற்றும் கிழக்கு வட மத்திய மாகாணங்களில் விஷேட மத்தியஸ்த்த சபைகளை உருவாக்க நடவடிக்கை!

ஜவ்பர்கான்

 

நீதியமைச்சினால் வடக்கு மற்றும் கிழக்கு வட மத்திய மாகாணங்களில் விஷேட மத்தியஸ்த்த சபைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லினக்க ஆணைக்குழுவில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காணப்படும் காணி தொடர்பான பிணக்குகளை சமரசம் செய்து தீர்த்து வைக்கும் பொருட்டு இந்த விஷேட மத்தியஸ்த்த சபைகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பரீட்சாத்த நடவடிக்கையாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த விஷேட மத்தியஸ்த்த சபைகள் அமைக்கப்படவுள்ளன.

 

இது தொடர்பாக மேற்படி மாவட்டங்களிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட காணி அதிகாரிகள், பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பிரதேச செயலாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு இந்த விஷேட மத்தியஸ்த்த சபையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த விஷேட மத்தியஸ்த்த சபைக்குரிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின்னர் இந்த மத்தியஸ்த்த சபை செயற்படத் தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

காணித்திணைக்களத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தப்படவுள்ள இந்த விஷேட மத்தியஸ்த்த சபையில் மேற்படி மாவட்டங்களில் காணப்படும் யுத்தத்தினால் ஏற்பட்ட காணிப்பிணக்குகள் மற்றும் ஏனைய காணிப்பிணக்குகள் என்பன சமரம் செய்து ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.

 

தற்போது பிரதேச செயலாளர் பிரிவு தோறும் உள்ள சமூக மத்தியஸ்த்த சபைகளுக்கு மேலதிகமாக மாவட்டங்கள் தோறும் இந்த விஷேட மத்தியஸ்த சபைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.