சுலைமான் றாபி
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கென்று தன்னலத்துடன் சொத்துக்களை சேர்ப்பதிலும் பார்க்க ஆங்கிலத்தினையும்; சிங்களத்தினையும் ஒழுங்கான சீறிய ஒழுக்கங்களையும் பெற்றுக் கொடுப்பதே அவர்களுக்காய் சேர்க்கும் மிகப்பெரிய சொத்தாகும் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் நேற்று (28) ஓய்வு பெற்ற ஆசிரியரும், அதிபருமான கலாபூஷணம் யு.எல். ஆதம்பாவா அவர்கள் எழுதிய ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் :
எமது சமூகத்தினுடைய நாமம் கொண்ட பாடசாலைகளை இனிமேல் தொடங்க முடியாது என்று சட்டங்கள் ஆக்கப்பட்டிருந்தாலும் அது வியப்புக்குரியதாக இருந்திருக்க முடியாது. ஆகவே இந்த உரிமையினை நாங்கள் எவ்வாறு பாதுகாத்துக்கொண்டிருக்கின்றோம்
சில பாடசாலைகளைக் கேட்கின்றபொழுது அந்தப் பாடசாலைகள் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அந்தப் பாடசாலைகளில் ஒரு பரிசளிப்பு விழாவும் இடம்பெறவில்லை. ஒரு சில பாடசாலைகளில் நான்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை விளையாட்டுப்போட்டி இடம்பெறுகின்றது. ஒரு சில பாடசாலைகளில் எந்தக் காலத்திலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் என்ற ஒரு நிகழ்வு இடம்பெற்றதை நாங்கள் காணமுடியாதுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பதை நாங்கள் தேடிப்பார்க்கக்கூடியவர்களாக இருக்கின்றோம்.
எமது ஆசிரியர்களினுடைய வகிபாகம், எமது பெற்றோர்களினுடைய வகிபாகம், அந்தக் கல்வித் திட்டங்களிலே எமது பாடசாலைகளை முன்னேற்றுவதில் நாங்கள் செலுத்த வேண்டிய அக்கறை எவ்வாறு இருக்கின்றது என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருந்துகொண்டிருக்கின்றது.
எமது குழந்தைகளுக்கென இரண்டு ஏக்கர் காணியைச் சேர்ப்பதற்கு அல்லது வீடு கட்டுவதற்கென எமது ஆயுட்காலம் முழுக்க நாங்கள் முயற்சி செய்துகொண்டு அதற்காக எமது நேரங்களையெல்லாம் தியாகம் செய்துகொண்டிருக்கின்றோம். ஆனால் அந்தக் குழந்தைக்கு பாடசாலையில் நாங்கள் செய்யப்போகின்ற அபிவிருத்தியின் பங்களிப்பு என்ன? நாங்கள் அந்தக் குழந்தைக்காக ஒரு ஒழுங்கான பாடசாலையை சீரமைப்பதில் எமது பங்களிப்பு தேவையாக இருந்துகொண்டிருக்கின்றதா? அல்லது இரண்டு ஏக்கர் காணியினை நாங்கள் எமது குழந்தைகளுக்காக சேர்ப்பது பலாபலன்களை அடையக்கூடியதாக இருக்கின்றதா? என்ற கேள்வியினை நாங்கள் எழுப்ப வேண்டிய அவசியம் இருந்துகொண்டிருக்கின்றது.
அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடசாலையினை உருவாக்குவோம் என்றால் அவ்வாறான ஒரு நிகழ்வினை நாங்கள் சாதித்துக்காட்டியவர்களாக நாங்கள் இருப்போம். எனவே பாடசாலை நிர்வாகம், எமது கல்வி அதிகாரிகள் தொடர்ச்சியாக தனிப்பட்ட நோக்கத்துக்காக அல்லாது எமக்கு கிடைத்திருக்கின்ற இந்த அவகாசத்தினை அவர்கள் பயன்படுத்தி எமக்கிருக்கின்ற உரிமையினை பயன்படுத்த வேண்டிய ஒரு கட்டாயமான சூழல் இருந்து கொண்டிருக்கின்றது என்றார்.