பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “உயிர் காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுங்கள் ” எனும் தொனிப்பொருளில் மனித நேயம் பேணும் 2வது மாபெரும் இரத்ததான முகாம் 26-09-2015 நேற்று சனிக்கிழமை காத்தான்குடி-05 மட்-அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
(யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் தலைவர் அல்பர் தலைமையில் இடம்பெற்ற இம் மாபெரும் இரத்ததான முகாமில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி தாதியர்கள் ,ஊழியர்கள் உட்பட ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் ,இளைஞர் யுவதிகள் , யூஸ் அமைப்பின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக்கினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
மேற்படி இரத்ததான முகாமில் ஆண்,பெண் 151 பேர் தங்களது இரத்தத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் தெரிவித்தார்.
குறித்த (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் சிரமதானம்,இரத்த தானம் ,கல்வி தொடர்பான இலவச வகுப்புக்கள் நடாத்துவது,நோயாளிகளை நலம் விசாரிப்பது போன்ற மனித நேயம் பேணும் சமூகப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.