அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டேவ்ரஸ் நகரில் ஒரு சிறிய வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருபவர், பிராண்டன் புவெல்(30). இவரது மனைவி பிரிட்டனி,(27) முதல்முறையாக கருவுற்றபோது, வயிற்றில் வளரும் குழந்தையின் நிலையை அறிந்துகொள்ள ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மண்டை ஓடு மற்றும் மூளையின் பெரும்பகுதி வளர்ச்சியடையாமல் அந்த 17 வார ஆண்கரு இருந்தது.
’மைக்ரோஹைட்ரானெஸ்பாலி’ என்ற இவ்வகை குறைபாட்டுடன் அமெரிக்காவில் சுமார் 5 ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பதுண்டு. ஆனால், பிறந்த பின்னர் அவை உடனடியாக இறந்துவிடுவது மிகவும் சகஜமான ஒன்றாக இருந்து வருகின்றது. எனவே, இந்த குறைபாட்டை சுட்டிக்காட்டிய டாக்டர்கள் உடனடியாக கருக்கலைப்பு செய்துகொள்ளும்படி பிரிட்டனிக்கு ஆலோசனை வழங்கினர்.
ஆனால், கடவுள் கொடுத்த கருவை சிதைக்கவும், அழிக்கவும் நாம் யார்? என்று தீர்மானித்த பிராண்டன் புவெல் – பிரிட்டனி தம்பதியர் அந்த குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க விரும்பினர். இதையடுத்து. 27-9-2014 அன்று சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிறந்த அந்த குழந்தைக்கு ஜாக்சன் புவெல் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
அந்த குழந்தையின் உயிர் எப்போது பறிபோகும்? என்பது தீர்மானமாக தெரியாத நிலையில் ஜாக்சனின் பெயரால் ‘பேஸ்புக்’கில் ஒரு பக்கத்தை துவங்கி, அவனது சிகிச்சைக்காக நிதி திரட்ட ஆரம்பித்தனர். அந்த பக்கத்துக்கு 90 ஆயிரம் ’லைக்’குகள் கிடைத்தன. ‘ஜேக்ஸ் ஸ்டிராங்’ என அபிமானிகளால் அழைக்கப்பட்ட அவனது சோகக்கதையை சுமார் 18 ஆயிரம் பேர் ‘ஷேர்’ செய்திருந்தனர். இவர்களில் 1,841 கொடையாளர்கள் ஜாக்சனின் சிகிச்சை செலவுக்கு 54 ஆயிரம் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர்.
இன்று நமது முகத்தை பார்த்து புன்னகைக்கும் தங்களது அன்பு மகன் நாளை உயிருடன் இருப்பானா? மாட்டானா? என்ற கவலையுடன் இந்த தம்பதியர் நாட்களை நகர்த்திவரும் நிலையில், நாட்கள் கடந்து, மாதங்களாகவும், பின்னர் ஒரு ஆண்டாகவும் மாறிவிட்ட நிலையில் ஜாக்சன் புவெல் இன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடுகிறான்.
அபூசாலி சுல்பிகர்