சிறுபான்மை மக்களது அரசியல் பிரதி நிதித்துவம் பறிக்கப்படும் எந்தவொரு தேர்தல் முறை மாற்றத்துக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் !

1528646_1392950437622080_733673344_n

 தற்போது அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள தேர்தல் முன்மொழிவு தொடர்பாக எமது கட்சி ஆராய்ந்துருவதுடன் சிறுபான்மை இன, சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை பாதிக்காத வகையிலான புதிய முறைமையொன்றுக்கே எம்மால் ஆதரவளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சிறுபான்மையினரிடம் தேர்தல் திருத்தச்சட்டத்தை திணிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். 

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து  மக்களின் இறைமையை மீட்டெடுக்கும் வகையிலும் பாராளுமன்றத்தினை பலப்படுத்துவம் வகையிலும், நீதித்துறை உட்பட ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 19ஆவது திருத்தச்சட்டம் அமைந்துள்ளது. 

தற்போது அத்திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  அரசாங்கம்  20ஆவது திருத்தச்சட்டமாக  தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசரமாக கொண்டு வரப்படும் இந்த தேர்தல் முறைமையை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அது தொடர்பாக நாம் ஆழமாக ஆராயவேண்டியுள்ளது. 

சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை பறித்து அவர்களை அடக்குமுறையினூடாக கட்டுப்படுத்துவதற்கு   முன்னைய அரசாங்கம் முனைந்ததன் காரணத்தாலேயே ஆட்சிப்பிடத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலைமையை சிறுபான்மை மக்கள் ஏற்படுத்தினார்கள்.

அதேநேரம் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாம் உட்பட அனைத்து சிறுபான்மை கட்சிகளும் நிபந்தனையின்றி ஆதரவளித்ததுடன்  30 சதவீதமான சிறுபான்மை மக்களும் வாக்களித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் சிறுபான்மை மக்களது அரசியல் பிரதி நிதித்துவம் பறிக்கப்படும் எந்தவொரு தேர்தல் முறை மாற்றத்துக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை. அவ்வாறு வழங்குவதானது நான் சார்ந்துள்ள சமுகத்திற்கு செய்யும் அதியுச்ச துரோகத்தனமாகும்.

எமது மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவதற்கு அவர்களின் பிரதிநிதித்துவங்கள் இன்றியமையாததாக காணப்படுகின்றன. ஆகவே அதில் குறைவு ஏற்படுவதென்பது அச்சமுகத்தின் எதிர்காலத்தை பாதிப்படையச் செய்வதாக அமையும்.

அதேநேரம் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதென்பது ஜனநாயகத்தை சிதைப்பதற்கு ஒப்பானது. அவ்வாறான நிலையில் மக்களின் அங்கீகாரமற்ற எந்த தீர்வினையும் பலவந்தமாக தினிப்பதை எமது கட்சி ஆதரிக்கப் போவதில்லை.

 தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் சரியான ஆராய்வுகளின்றி  அவசர அவசரமாக  மாற்றத்தை ஏற்படுத்தி பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்வதால் ஒட்டுமொத்த சிறுபான்மை சமுகமும் பாதிப்படையும். ஆகவே அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு அனதை:து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவானதொரு முறைமையே நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என்றார்.