அரசாங்கத்தின் 19வது அரசியல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுமா ?

chandrika-ranil-sirisena_Fotor_Collage

 அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலான விவாதம் இன்று 27ஆம் திகதி திங்கட்கிழமையும் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கின்றது.

  2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஆரம்பமான அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் 100 ஆவது நாள், கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவிருக்கின்றன.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே தலைமையிலான அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட நூறு நாட்களுக்குள் செய்து முடிப்பதாக புதிய அரசாங்கத்தினால் 23 உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. உறுதிமொழிகளில் மிகவும் முக்கியமானதாக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் பேசப்பட்டது.

 அந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் செய்தபோதிலும் அதனை 100 நாட்களுக்குள் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. இந்த சட்டமூலத்தில் சில உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டுமென் உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்திருந்தது. இந்நிலையில், 19ஆவது திருத்தத்தின் ஊடாக , ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கமுடியாது என்று எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். ஆகையால், சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அல்ல,  சமர்ப்பிபதிலேயே அரசாங்கம் கடும் சவால்களை எதிர்கொண்டிருந்தது.

 19ஆவது திருத்தம் மட்டுமன்றி தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்தையும் ஏககாலத்தில் நிறைவேற்றவேண்டும் என்று எதிரணியினர் கோரிக்கைவிடுத்தனர். இதனால், ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த 19ஆவது திருத்த சட்டமூலம் மறுநாள், 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் இந்த திருத்த சட்டமூலத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனமையால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாடாளுமன்றத்தில் கட்சித்தலைவர்கள் கூட்டம் நட்டத்தப்பட்டது.