கல்குடாத் தொகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் தீர்க்கப்படுவதை அரசியல் தலைமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் -ஏ.என். முஹம்மத் றிழா

அசாஹீம்  
நாட்டில் நிறுவப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக கல்குடாத் தொகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் தீர்க்கப்படுவதை அரசியல் தலைமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் ஏ.என். முஹம்மத் றிழா தெரிவித்தார்.
rila
 
நாட்டின் தேசிய இனமுரண்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவருகின்ற இக்காலப்பகுதியில் கல்குடா முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மேசைக்கு நகர்த்துவதற்கான பூர்வாங்க வேலைகளை சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரசியல் தலைமைகள் மேற்கொள்ளவேண்டும்.
 
குறிப்பாக, காணி எல்லை நிர்ணயம், பிரதேச சபைகளுக்கான வட்டார எல்லை நிர்ணயம், தேர்தல் தொகுதி மாற்றியமைப்பு, பிரதேச சபைகளின் தரமுயர்த்தல்களும் புதிய பிரதேச சபை நிர்ணயமும், போர் காலங்களில் இழக்கப்பட்ட கிராமங்கள் தொடர்பான மீள்வரைவுகள், வயல் காணிகளுக்கான உரிமம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் புதிய திருத்தங்கள், குடியேற்றக் காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள், கால்நடைகள் மற்றும் மேய்ச்சல் தரைகள் தொடர்பான இறுதி தீர்வுகள், இயற்கை நீர் ஏரிகள் தொடர்பான இறுதி தீர்வுகள் போன்றன தொடர்பில் புலமைத்துவ அறிக்கைகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
 
தேர்தல் காலங்களில் மாத்திரம் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உயிர் கொடுப்பதும் தேர்தல் முடிந்த கையுடன் இவற்றைக் கிடப்பில் போடுவதும் என்ற தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உடனடித் தீர்வை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். 
 
கல்குடாவில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலானது, அதிகாரப் போட்டிக்கான வாயிலை திறந்து கொடுத்துள்ள ஏககாலத்தில், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் அக்கறையுடன் அணுகுவதற்கான வாயில் மூடப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. அதிகாரப் போட்டியால் அரசியல் அதிகாரத் துஸ்பிரயோகங்கள், ஊழல், முறையற்ற நிருவாகம் என்பன மீண்டும் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. எனவே இனியும் மக்கள் தோற்று, கட்சிகள் வெல்வதற்கான நிலைதோன்றுமானால் மக்களின் பலமான குரலாக எமது அமைப்பு மாறுவதற்கான வரலாற்று இடைவெளி ஏற்படும் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விளைகின்றோம். இதற்கான அணியில் சிவில் அமைப்புகளும், புலமையாளர்களும் கைகொடுக்கவேண்டும் எனவும் அழைப்புவிடுகின்றோம்.