அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை பழைய கல்விக் கந்தோர் வீதிக்கு அமரர் டாக்டர் முருகேசுப்பிள்ளையின் பெயரை சூட்ட கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் சமர்ப்பித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதன் பிரகாரம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மணற்சேனை நோக்கி செல்லும் பழைய கல்விக் கந்தோர் வீதியின் பெயரை டாக்டர் முருகேசுப்பிள்ளை வீதி என மாற்றுவதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இப்பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் கூறியதாவது;
“யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியக் கலாநிதி முருகேசுப்பிள்ளை அவர்கள், வைத்திய சேவைக்காக கல்முனைக்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் மிகச்சிறப்பாக பணியாற்றி மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.
இக்காலப் பகுதியில் வெறும் வைத்திய சேவையுடன் நின்று விடாமல் சமூகப் பணிகளிலும் தமிழ்- முஸ்லிம் ஐக்கியத்திற்காகவும் அவர் பெரிதும் உழைத்து வந்துள்ளார். இதனால் அவர் கல்முனையின் சமாதானக் காவலனாகப் போற்றப்பட்டார். கலை, இலக்கிய பணிகளிலும் கூடிய ஈடுபாடு காட்டி அவற்றின் மூலமும் தமிழ்- முஸ்லிம் சமூகங்களின் உறவுப் பாலமாக அவர் திகழ்ந்தார்.
எல்லோரும் மிகவும் நம்பிக்கையுடன் வைத்தியத்திற்காக இவரை நாடிய போதிலும் பணத்திற்காக என்று பணியாற்றாமல் வறியவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வைத்திய சேவையை வழங்கிய ஒரு பெறுந்தகையாக இருந்தார். உண்மையில் மருத்துவ சேவைக்கு அவர் ஓர் உதாரண புருஷராகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. அதற்காக இந்த கல்முனை மண் பெரும் விழா எடுத்து அவரை வாழும்போதே வாழ்த்தி கௌரவித்தி மகிழ்ந்துள்ளது.
இத்தகைய ஓர் உத்தமரை என்றும் நினைவுகூரும் வகையில் அவரது பெயரை மேற்படி வீதிக்கு சூட்டி மாநகர சபை கௌரவமளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் நிஸாம் காரியப்பர் உரையாற்றுகையில்; “இப்பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்காக அயராது உழைத்து வந்த டாக்டர் முருகேசுப்பிள்ளை அவர்கள் முஸ்லிம்களை மிகவும் நேசித்து வந்த ஒரு பெருமகனாவார். அவரது சேவைகள் என்றும் மறக்க முடியாதவை. ஆகையினால் அவரது பெயரை அவர் வாழ்ந்த வீதிக்கு சூட்டுவதற்கான இப்பிரேரணையை நான் பெரிதும் வரவேற்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.
பிரதி முதல்வர் அப்துல் மஜீத் பேசுகையில்; “வைத்தியத் துறையில் மிகவும் தீர்க்கதரிசியாகத் திகழ்ந்த டாக்டர் முருகேசுப்பிள்ளை அவர்கள், அக்காலப் பகுதியில் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வந்துள்ளார். அவரது அனுபவ ரீஎதியான வைத்தியத்தை நானும் நுகர்ந்துள்ளேன். அவர் அன்று எனக்கு வழங்கிய மருத்துவ ஆலோசனைகளை நான் இன்றும் கடைப்பிடித்து வருகின்றேன். அதில் சற்று தவறிழைக்கும்போது அதன் பாதகத்தை நான் உணர்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.