அட்டாளைச்சேனை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.சி.பதுறுதீன் காலமானார் !

எஸ்.எம்.அறூஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணியின் பிரதிக் கொள்கை பரப்புச் செயலாளராகவும் கடமையாற்றிய ஏ.சி.பதுறுதீன் அவர்களின் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று   மாலை 3.30 மணியளவில் காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஹூன்,

1442321308-16209

தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கடந்த மூன்று நாட்களாக கோமா நிலையில் இருந்து வந்தார். இன்று   மாலை 3.30 மணிக்கு பதுறுதீனின் உயிர் பிரிந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு வயது 64 ஆகும்.

மக்களோடு மக்களாக நின்று அரசியல் செய்தவர் ஏ.சி. பதுறுதீன். கனவான் அரசியலுக்கு நிகரானவர் இவர். எந்தக்கட்சியின் ஆதரவாளராக இருந்தாலும் அவர்களோடு அன்பாகப் பழகும் மனித பண்பானவர் ஏ.சி.பதுறுதீன் அவர்களாகும்.

அட்டாளைச்சேனை அரசியல் வரலாற்றில் முதலாவது மாகாண சபை உறுப்பினர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் இவராகும். மாவட்ட ரீதியிலான தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்ற முதலாவது அட்டாளைச்சேனை அரசியல்வாதியும் பதுருதீன் அவர்களாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளரச்சிக்காக மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரபுடன் இணைந்து செயலாற்றியவர்.

கட்சியின் நிதிப்பங்களிப்பில் ஏ.சி.பதுறுதீனின் பங்களிப்பு முக்கியமானது என்பதை தலைவர் அஸ்ரப் அவர்கள் எப்போதும் நினைவுபடுத்திப் பேசுவார்.

அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் அரசியல் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகித்திருக்கின்றார்.

நாங்கள் இளவயதினராக இருந்தாலும் இரவு நேரங்களில் நண்பர்களாக அரசியல் மற்றும் நாட்டு நடப்புக்களை எங்களுடன் பறிமாறிக் கொள்வார். அவரது பேச்சு, மொழி நடை, நகைச்சுவை என்னை எப்போது் கவர்ந்திழுக்கும்.

சில சந்தர்ப்பங்களில் நள்ளிரவு 2 மணி தாண்டியும் நானும் பதுறுதீன் அவர்களும், சிரேஸ்ட சட்டத்தரணியும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக் செயலாளருமான எஸ்.எம்.ஏ.கபுரும் அவரின் வீட்டின் முன்பாக பேசிக் கொண்டிருப்போம்.

இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பதுறுதீன் புத்தகங்களை வாசிப்பதில் தீவிரமான ஒருவர். அத்தோடு கவிதை எழுதுவதிலும் ஆற்றல் கொண்ட ஒருவர். வெளிநாடுகளில் நடைபெற்ற பல இலக்கிய நிகழ்வுகளிலும் பார்வையாளராக பங்குபற்றியும் இருக்கின்றார்.

அட்டாளைச்சேனையின் பெயர்போன மர்ஹூம் அப்துல் காதர் ஆலிம் அவர்களின் புதல்வரான எ.சி. பதுறுதீனுக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு ஆறு ஆண் சகோதரர்களும், ஐந்து பெண் சகோதரிகளும் இருக்கின்றனர்.அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.