கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தில் பெருமளவு காணி குடியிருப்புக்கே ஒதுக்கப்படும் !

அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படும் 800 ஏக்கர் காணிகளில் பொது மக்களின் குடியிருப்புக்காக பெருமளவு காணி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் குறித்த சில பகுதிகள் மாத்திரம் வீதி உள்ளிட்ட பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.  
Nizam
கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் குறித்து அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தலைமை வகித்துப் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு முதல்வர் நிஸாம் காரியப்பர் மேலும் கூறியதாவது;
“கல்முனையில் பாரிய நிலத்தட்டுப்பாடு இருப்பதாலேயே வயல் பகுதிக்கு எமது நகரத்தை விஸ்தரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. கல்முனை மாநகர சபைப் பகுதியில் சுமார் 4500-5000 ஏக்கர் விவசாயக் காணி உள்ளது. இதில் சுமார் 800 ஏக்கர் காணி பொது மக்களின் நலன் கருதி புதிய நகர அபிவிருத்திக்காக மண்ணிட்டு நிரப்பப்படவுள்ளது. 
உத்தேச நகர அபிவிருத்தி திட்டத்தின் பிரகாரம் இக்காணிகளில் பெரும்பகுதி காணி அவற்றின் சொந்தக்காரர்களின் குடியிருப்புக்காக நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். சுமார் 10 தொடக்கம் 15 வீதம் வரையிலான பகுதி காணியே வீதி உள்ளிட்ட பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும். இதற்காக சுவீகரிக்கப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தினால் நஷ்டஈடு வழங்கப்படும்.
நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுகின்ற சுமார் 800 ஏக்கர் காணியில் 40 வீதமான பகுதி ஏற்கனவே கைவிடப்பட்டதாகும். இன்னும் 60 வீதமான காணி விவசாய செய்கைக்குரியது என்பதால் அந்தப் பாதிப்பை ஈடு செய்யும் பொருட்டு மீதமுள்ள நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணியில்  அரைவாசிப் பகுதியையாவது கல்லோயா திட்டத்திற்கு முன்னர் இருந்தது போன்று இரண்டு போக நெற் செய்கைக்கு ஏற்றதாக மாற்றியமைப்பதற்கு சிறிய ரக நீர்ப்பாசனத் திட்டங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் நகர அபிவிருத்தித் திட்டத்தினால் சுமார் 480 ஏக்கர் காணி மூலம் இழக்கப்படும் விவசாய பொருளாதாரத்திற்கு ஈடாக சுமார் இரண்டாயிரம் ஏக்கர் காணி இரு போக விவசாயக் காணியாக மாற்றியமைக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.
ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட விவசாயம் கைவிடப்படவில்லை. அவரவர் வீடுகளுக்கு பின்னால் அமைந்துள்ள காணிகளில் அவர்களே விவசாயம் செய்யும் அளவுக்கு சிறிய ரக நீர்ப்பாசனத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதை நான் அங்கு விஜயம் செய்தபோது நேரடியாக் கண்டறிந்துள்ளேன்.  
இது போன்று எமது புதிய நகரத்தில் அமையவுள்ள குடியிருக்களில் வாழ்கின்ற மக்களுக்கு மேற்படி விவசாயத்திற்கான ஏற்பாடுகள் வாழ்வாதாரமாக அமையும் என்பது எமது எதிர்ப்பார்ப்பாகும். அப்போதுதான் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் உண்மையான இலக்கை அடைந்து கொள்ள முடியும். 
ஆகையினால் ஏற்கனவே வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தில் இவ்விடயங்களை உள்வாங்கி சில திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கான வரைபடம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அதில் மேற்கொள்ள வேண்டிய சில திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சந்திரதாச, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.பாறூக் உட்பட பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்கள் சார்பான அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.