ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க தலைமையிலான புதிய அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாகவும் இலங்கையில் இடம்பெற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு பொறிமுறைகள் உருவாக்கப்படவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவாவில் தெரிவித்த கருத்து மிகவும் வரவேற்க வேண்டியதொன்றாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீர இலங்கையில் நீடித்து வரும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தமது அரசு மேற்கொண்டு வரும், மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக வழங்கியிருக்கும் விளக்கம் நம்பிக்கை தருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை ஜெனிவாவில் இடம்பெற்ற பல்வேறு மாநாடுகளில் சுட்டிக்காட்டியுள்ள போதும், அவை நிறைவேற்றப்படவில்லை என்பதை கோடிட்டுக் காட்டியிருக்கும் ஹாபிஸ் நஸீர், மங்கள சமரவீரயின் உரை அது போல் அமையாது நீண்டகாலத் தீர்வொன்றுக்கு இட்டுச்செல்லுமென்ற நம்பிக்கையையும் கிழக்கு முதலமைச்சர் வெளிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கிய வடக்கு, கிழக்கு மக்கள் இன்னும் அதன் வடுக்களால் அவதியுற்று வருகின்றனர். எனவே புதிய நல்லாட்சி அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் இந்த மக்களை ஆறுதல் படுத்தும் என தாம் நம்புவதாகவும் இவை வெறும் வாக்குறுதிகளாக மட்டும் இருக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
CM MEDIA