அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் : ஜெனிவாவில் மங்கள !

 இலங்கை மீதான ஐ.நா.வின் அறிக்கை மார்ச் மாதம் சர்ப்பிக்கப்பட இருந்த நிலையில், இலங்கை தனது நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செப்டம்பர் மாதம் வரை அறிக்கையை ஒத்திவைத்தமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

 ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்­ப­மானது. இந்த கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
 
இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கம்  பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னின்று செயற்படும்.
 குறிப்பாக அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும்.

தற்போதைய அரசாங்கம் இனம், மொழி பேதமின்றி பாகுபாடின்றி செயற்படுவதை, எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டமை மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசராக தமிழரான ஸ்ரீ பவன் நியமிக்கப்பட்டுள்ளமை ஆகியவை எடுத்துக்காட்டாகும்.
இலங்கை படையினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், அது ஒரு சிலர் செய்த தவறாகும். எனினும் இனிமேல் அவ்வாறு நடைபெற மாட்டாது.

இந்நிலையில், சர்வதேச அமைப்புக்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும். இதற்கு தாம் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.