மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
டெல்லியில் உள்ள ஹைதரபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கை ஐநா மனித உரிமைகள் நடவடிக்கைகள், இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து இரு நாட்டுப் பிரதமர்களும் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ரணில் இதன்போது மேலும் கூறியதாவது,
ஜெனிவா மாநாடு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசித்தோம். இலங்கை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
பயங்கரவாத ஒழிப்பில், இந்தியா உடன் இணைந்து செயல்படுவோம். பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான செயல்பாடு நிலவிவருகிறது.
இலங்கை பாராளுமன்றத்தில், அனைத்து கட்சிகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. முதல் பயணமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவிற்கு தான் வந்தார், நானும் முதல் முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது, என ரணில் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தியா – இலங்கைக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள மருத்துவனைக்கு, இந்தியா தேவையான மருத்துவ வசதிகளை அளிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் அனுப்புவதில், இலங்கைக்கு தேவைப்படும் உதவிகளை இந்தியா மேற்கொள்ளும் என்றும் இந்த ஊடகவியளாலர் சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி கூறினார்.
அத்துடன் இலங்கையின் அனைத்து வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்பதற்கு உறுதியளிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் கெளரவமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்து கருத்து வௌியிட்ட பாரதப் பிரதமர், “இருநாட்டு மீனவ சங்க பிரதிநிகள் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்படுகிறோம்.
மேலும், மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவேண்டும் என இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தினேன். ஏனெனில், இது அவர்களது வாழ்வாதார பிரச்சினை.
இதேவேளையில், இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு தயாராகும்படி ஊக்குவித்து வருவதாகவும் ரணிலிடம் கூறினேன்”, என்றார்.
அத்துடன் இந்தியா – இலங்கை இடையே, நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.