அபு அலா
தனி நபராலாயோ அல்லது தனி குழுக்களினாலோ ஜனநாயகத்ததை ஏற்படுத்த முடியாது “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதற்கு அமைவாக அனைவரினதும் ஒத்துழைப்பின் காரணமாகவே இன்று உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடிந்தது. என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களத்தின் 60 வருடப் பூர்த்தியினையிட்டு நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலில் அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேர்தல் திணைக்களத்தின் 60 வது வருட பூர்த்தியினை தேசிய ரீதியில் கொண்டாடும் வகையில் நான்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இந்த நிகழ்வுகள் அநுராதபுரம் மகாபோதியிலும், யாழ்பாணம் மடு தேவாலயத்திலும், திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலையத்திலும், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலிலும் ஏற்பாடு செய்துள்ளோம்.
சம்மாந்துறையினை தெரிவு செய்வதற்கான காரணம் இந்த மாவட்டத்தில் கூடுதலான முஸ்லீம்கள் செரிந்து வாழ்வதனாலும் சம்மன்காரர் இங்கு வந்து இறங்கிய இடம் என்பதனாலும், இந்த ஊரிலுள்ள மக்களிடத்தில் ஜனநாயக ரீதியான நிருவாக முறைமை பள்ளி பரிபாலனங்களில் காணப்படுவதனை அறிந்தவன் என்பதனாலும் இந்த இடத்தையும், ஊரையும் தெரிவு செய்து இதனை நாத்த திட்டமிட்டோம்.
சகல மதத்தவர்களும் ஒட்டு மொத்தமாக எதிர்பார்ப்பது ஜனநாயம், இந்த ஜனநாயகத்தை எல்லாம் மதங்களும் வலியுறுத்துகின்றன. இந்த ஜனநாயகத்தைப்பற்றி இஸ்லாம் மதம் குர்ஆன், ஹதீஸ் மூலம் மிக ஆனித்தரமாக வலியுறுத்தி கூறியுள்ளது. அதனை நாம் தற்போது எமது நாட்டில் நிலைநிறுத்தியுள்ளோம் என்பதை எல்லோரும் பெரும் மகிழ்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
தொடர்ச்சியாக நாம் ஜனநாயக வழிமுறைகளில் ஒற்றுமையாக அடம்பன் கொடிபோல் செயற்படவேண்டும். நாம் சிங்கள மொழியில் கேட்டாலும், அரபு மொழியில் கேட்டாலும், ஆங்கில மொழியில் கேட்டாலும், தமிழ் மொழியில் கேட்டாலும் கேட்கின்ற விடயம் ஒன்றுதான் அதுதான் ஜனநாயகம் அது பாதுகாக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய ஆட்சியின் கலிபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான, அலி ஆகியோர்களின் காலங்களில் எவ்வாறு ஜகநாயக ரீதியில் ஆட்சியின் செயற்பாடுகள் அமைந்திருந்ததோ அதேபோன்று அவர்கள் செய்த அந்த ஆட்சியை நாம் மிகத் தெளிவாக விளங்கி இன மத வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழவேண்டும் எ்னறார்.