ஈஸ்டன் சர்வதேச கல்லூரியின் கிளை நிறுவனம் ஒன்று கல்முனை நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று சனிக்கிழமை கல்லூரியின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காஸிம், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், கல்முனை முதல்வரின் விசேட ஆலோசகரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ரெஸ்ட் ஹவுசஸ் லிமிட்டட் பணிப்பாளருமான லியாகத் அபூபக்கர் உட்பட மற்றும் பலரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தனுஜா அலி சாஹிர் மௌலானா அங்குரார்ப்பண உரையை நிகழ்த்தியதுடன் அதிதிகளும் சிறப்புரையாற்றினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
தலைநகர் கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்டு, மட்டக்களப்பிலும் கிளை நிறுவனத்தைக் கொண்டு ஒரு தசாப்த காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள ஈஸ்டன் சர்வதேச கல்லூரி தற்போது அம்பாறை மாவட்ட சமூகங்களின் நலன் கருதி கல்முனை நகரிலும் அதனை விஸ்தரிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கவுன்சிலுடன் கூட்டிணைப்பு செய்யப்பட்டுள்ள இக்கல்லூரி இரண்டரை வயது தொடக்கம் உயர்தர வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அதிசிறப்பு பாடத்திட்டங்களுடன் ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் செயற்பாடுகளை முன்கொண்டு செல்கின்றமை விசேட அம்சமாகும்.