வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுத்துறை விருத்திக்கு விஷேட கவனமெடுக்கப்படும் – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்

எஸ்.அஷ்ரப்கான்
பின்தங்கிக் காணப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுத்துறையை விருத்தி செய்ய விஷேட கவனமெடுக்கப்படும் என புதிதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். 
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் தனது சொந்த மண்ணான கல்முனைக்கு முதல் விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கு சாய்ந்தமருது, கல்முனை மக்களால் மகத்தான வரவேற்பு நேற்று (12) சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
இதன்போது சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல், கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல், கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் ஆகியவற்றின் நிர்வாகத்தினராலும் வரவேற்பு வழங்கப்பட்டதுடன் அங்கு இடம்பெற்ற துஆப் பிரார்த்தனை நிகழ்விலும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார். இதன்போது இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
harees3
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 30 வருட யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை நிவர்த்தி செய்ய எமது விளையாட்டுத்துறை அமைச்சினூடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள முக்கிய நகரங்களில் உள்ளக விளையாட்டு கட்டிடத் தொகுதிகள், உள்ளக அரங்குகள் என்பன நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் மாகாண, மாவட்ட, பிரதேச ரீதியான மைதானங்களையும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்டத்தின் சகல ஊர்களுக்குமான மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படும். அதனுடன் விளையாட்டுக் கழகங்ளையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் இளைஞர், யுவதிகளின் ஆளுமை மற்றும் திறமைகளை விருத்தி செய்து நாட்டின் விளையாட்டுத்துறைக்கு அவர்களின் பங்களிப்பினை உச்ச அளவில் பெற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளோம்.
விளையாட்டின் மூலம் எமது நாட்டின் புகழை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லக்கூடிய அனைத்து வேலைத்திட்டங்களையும் விளையாட்டுத்துறை அமைச்சரும் எனது பல்கலைக்கழக நண்பருமான தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளேன்.
என்மீது நம்பிக்கை வைத்து இளைஞர்களுடன் தொடர்புடைய இவ்வமைச்சை வழங்கிய நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மற்றும் இவ்வமைச்சினை வழங்க என்னை சிபாரிசு செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.