உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது !

எஸ்.அஷ்ரப்கான்

தம்புள்ள புனித பிரதேசம் என்ற காரணத்துக்காக அங்குள்ள பள்ளிவாயலை வேறிடம் மாற்ற எடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் தலையிட வேண்டும் என கோரியுள்ளது. இது பற்றி அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததே தம்புள்ள பள்ளிவாயலில் மத தீவிரவாதிகள் கைவைக்க அனுமதித்ததுதான் என்பதை வரலாறு அறியும். 2005 முதல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பூரணமான ஆதரவை தந்த உலமா கட்சி தம்புள்ள பள்ளிவாயலை தாக்கிய எவரும் கைது செய்யப்படாமை காரணமாக அவருக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகியது. அச்சம்பவத்தில் ஈடுபட்டோரில் ஓரிருவரையாவது கைது செய்து சட்டத்தை நிலைநாட்டும்படி நாம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதால் நாம் விலகினோம். ஆவ்வாறு விலகிய ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சி மட்டுமேயாகும். எமது எச்சரிக்கையை புரிந்து கொள்ளாமை காரணமாக இன்று மஹிந்தவின் அரசுக்கு என்ன நிலை நடந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.
எம்மை பொறுத்த வரை தம்புள்ள பள்ளி புனித பிரதேசம் என்ற காரணத்துக்காக உடைக்கப்படுவதையோ அல்லது அதற்கு மாற்றுக்காணி வழங்கப்பட்டு இடம் மாற்றப்படுவதையோ அனுமதிக்க முடியாது. இதனை முஸ்லிம் சமூகம் ஏற்கும் பட்சத்தில் எதிர் காலத்தில் இதனை உதாரணமாக காட்டி பல பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டு இடம் மாற்றப்படும் நிலை வரலாம். இதற்காக நீதி மன்றம் சென்றால் தம்புள்ள விவகாரம் உதாரணமாக காட்டப்பட்டு மறுக்கப்படும் நிலையும் உள்ளது.
அண்மையில் தம்புள்ளயை சேர்ந்த சிலர் தம்புள்ள பள்ளியை இன்னொருவரின் காணிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாகவும் இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி பதில் எழுதியுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. இது உண்மையாக இருப்பின் இச்செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். நாட்டில் இனவாதம் ஒழிய வேண்டும் என்பதில் அக்கறையுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இந்த அரசு இவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபடுவது கவலை தருவதாகும்;. சுகல இனங்கள் மத்தியிலும் நல்லுறவை ஏற்படுத்தும் இலட்சியம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தகைய நடவடிக்கைகளுக்கு துணை போகமாட்டார் என உலமா கட்சி நம்புகிறது. ஆகவே இது விடயத்தில் பாராளுமன்றத்தில் அங்கும் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் உடனடி கவனத்தில் எடுத்து புனிதப்பிரதேசம் என்பதற்காக தம்புள்ள பள்ளி இடம் மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.(எஸ்.அஷ்ரப்கான்-0772348508