அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக் கழிவுகள் அகற்றும் பணிகள் நாளை சனிக்கிழமை தொடக்கம் வழமை நிலைக்குத் திரும்பும் என அறிவிக்கப்படுகிறது.
சேகரிக்கப்படும் குப்பை, கூளங்களை கொட்டுவதில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இப்பிரதேசங்களில் அவை அகற்றப்பட்டு வந்தன. இதனால் சில பகுதிகளில் குப்பை, கூளங்கள் கணிசமானளவு தேங்கிக் கிடப்பதாக பொது மக்களினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இவ்விடயம் மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக குப்பை கொட்டும் இடமொன்றில் ஏற்பட்ட தடங்கல் நிவர்த்தி செய்யப்பட்டு, நாளை சனிக்கிழமை தொடக்கம் அங்கு மீண்டும் குப்பைகளை கொட்டுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் பிரகாரம் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அடுத்த ஒரு வார காலத்தினுள் முற்றாக அகற்ற முடியும் என குறிப்பிட்ட முதல்வர் நிஸாம் காரியப்பர், கடந்த இரு வாரங்களாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.