அவன்கார்ட் வழக்கு மற்றும் KP என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களைக் கவனத்திற்கொண்டு சட்ட மாஅதிபர் திணைக்களம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவன்கார்ட் வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் திரட்டப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு, கடற்படை உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களின் ஆய்வுகளின் பிரகாரம் துப்பாக்கிகள் கட்டளை சட்டம், வெடிபொருள் கட்டளைச் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் எந்தவிதமான குற்றங்களும் புலனாகவில்லை என சட்ட மாஅதிபர் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த ஜூன் மாதத்தில் சட்ட மாஅதிபரால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட குற்றச்செயல் தொடர்பில் நீதிமன்றம் முன்னிலையில் நிரூபிக்கக்கூடிய, போதுமான சாட்சியங்கள் இருப்பின் மாத்திரமே குற்றச்செயல் குறித்து முறைப்பாடு செய்யமுடியும் என்றும் சட்ட மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, மக்கள் மத்தியில் பரவுகின்ற வதந்திகளின் அடிப்படையில் செயற்படக்கூடாதெனவும் சட்ட மாஅதிபரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, KP என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவர் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற பயங்கரவாத செயற்பாடுகள் குறித்த விசாரணைகள் முழுமையாக நிறைவுபெறவில்லை என்றும் சட்ட மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த விடயம் குறித்து தொடரப்பட்டுள்ள ரிட் மனுவின் பிரகாரம், 193 பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் KP என்பவரின் ஏனைய குற்றவியல் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக சட்ட மாஅதிபரால், நீதிமன்றத்திடம் நியாயமான கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கண்காணிப்பு அறிக்கையொன்றை சட்ட மாஅதிபர் திணைக்களம் கோரியிருந்த போதிலும், அனைத்து சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களையும் பொலிஸார் இதுவரை சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கவில்லை எனவும் சட்ட மாஅதிபர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
46 சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களை பொலிஸார் தமக்கு அனுப்பியுள்ள போதிலும், அவை குறித்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் KP என்பவர் அந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக இதுவரை சாட்சியங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும், KP என்பவர் மீது குற்றச்செயல்கள் தொடர்பில் வழக்குத் தொடரப்பட மாட்டாதென நீதிமன்றத்திடம் எந்தவொரு அறிவித்தலையும் சட்ட மாஅதிபர் திணைக்களம் விடுக்கவில்லை எனவும் சட்ட மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குமரன் பத்மநாதனுக்கு எதிராக குற்றங்கள் குறித்து வழக்குத் தொடரும் மட்டத்திலான விசாரணைகளை அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளை பொலிஸ் திணைக்களம் இதுவரை முன்னெடுக்கவில்லை எனினும், குற்றவியல் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அவர்மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு இயலுமான சாட்சியங்கள் இருப்பின், உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு தாம் தெரியப்படுத்தியுள்ளதாக சட்ட மாஅதிபர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.