அரசியல் வானில் சம்பந்தன் எனும் விடிவெள்ளி …..! (Photo)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்பில் ஒரு பார்வை.

sampanthan-567-01

1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இராஜவரோதயம் தம்பதியரின் புதல்வராக, தமிழரின் வரலாற்று சிறப்புமிக்க கிழக்கிலங்கையின் திருகோணமலையில் பிறந்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிவபாலன் மற்றும் என்.ஆர்.இராஜவரோதயம் ஆகியோர் இரா.சம்பந்தனின் உறவினர்களாவர்.

யாழ் புனித பத்தரிசியார் கல்லூரி, குருநாகல் புனித அன்னம்மாள் கல்லூரி, திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி மற்றும் மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகிய பாடசாலைகள் சம்பந்தனின் கல்விப் பயணத்திற்கு வலுச்சேர்த்தன.

sambanthan

பின்னர் இலங்கை சட்டக்கல்லூரியில் பயின்ற அவர் திறமையான வழக்கறிஞராக தொழில்வாழ்க்கையில் காலடி பதித்தார்.

லீலாவதியை கரம் பற்றிய சம்பந்தன், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

1956 ஆம் ஆண்டு இலங்கை தமிரசுக் கட்சியில் இணைந்துக்கொண்டமை சம்பந்தனின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாகும்.

sambanthan

1963 ஆம் மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் இரா.சம்பந்தனுக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் வேட்புமனு வழங்க முன்வந்தாலும் அவர் அதனை மறுத்தார்.

எனினும் 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் மக்கள் ஆணையைப் பெற்றார்.

sambanthan

1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜீலை கலவரத்திற்று எதிர்ப்பைத் தெரிவித்து மூன்று மாதங்களுக்கு மேல் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்ததால் 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி இரா.சம்பந்தன் பாராளுமன்ற ஆசனத்தை இழக்க நேர்ந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளர், உபதலைவர் மற்றும் பொதுச் செயலாளராகவும் அவர் பதவி வகித்திருந்தார்.

prabhakaran-sampanthan

2001 ஆம் ஆண்டு இரா.சம்பந்தனின் அரசியல் வாழ்வின் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்தது.

தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது அதன் தலைமைமை பதவியும் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் களமிறங்கிய அவர் 18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் .

sam4236612

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இலங்கை தமிழரசு கட்சியின் கீழ் போட்டியிட்ட வேண்டிய நிலைக்கு இரா.சம்பந்தன் தள்ளப்பட்டதுடன், அந்தக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது

2004, 2010 ஆகிய இரண்டு பொதுத் தேர்தல்களிலும் திருகோணமலை மாவட்ட மக்களின் அமோக ஆதரவுடன் சம்பந்தன் வெற்றிபெற்றிருந்தார்.

2014 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை அடுத்த நிலை தலைவர்களிடம் கையளித்த
இரா.சம்பந்தன் தாம் பதவிகள்மீது அதீத ஈடுபாடுகொண்டவர் அல்லவென்பதை எடுத்துரைத்தார்.

sampanthan-hakeem-300-news

எனினும் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராக செயற்பட்டுவரும் இரா.சம்பந்தன் கடந்த பொதுத் தேர்தலிலும் கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்று 16 ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 33, ஆயிரத்து 834 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவான
இரா.சம்பந்தன், எதிர்கட்சி தலைவராக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக தமிழ் தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தெரிவாகியுள்ளார்.

இதற்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு அப்பாபிள்ளை அமிர்த்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்திருந்தார்.

பல சவால்களுக்கு மத்தியில் தமிழர் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நன்மதிப்பை பெற்ற மக்கள் சேவகனாவார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸின்   நல் வாழ்த்துக்கள்…