இலங்கை அரசியலுக்கு ஓர் எடுத்துக்காட்டு – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதி பிரீன் காசிநாதன் பாராட்டு!

அபு அலா –
கிழக்கு முதலமைச்சர் இலங்கை அரசியலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அதுமாத்திரமல்லாமல் இஸ்லாமியராக இருந்துகொண்டு மூவின மக்களுக்கும் இன, மத வேறுபாடின்றி தனது அரசியல் அதிகாரங்களையும், அபிவிருத்திகளையும் பகிர்ந்தளித்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஓர் திறமைமிக்க ஆற்றல் உள்ளவராவார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல் ஆய்வாளருமான பிரீன் காசிநாதன் தெரிவித்தார்.
fasi_Fotor
மட்டக்களப்பு லகூன் ஹோட்டலில் நேற்று (31) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல் ஆய்வாளருமான பிரீன் காசிநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மூவின இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளதை நான் இந்த இடத்தில் நினைவு கூறியே ஆகவேண்டும். கிழக்கு மாகாணத்துக்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் நியமிக்கப்படும்போது தமிழ், சிங்கள மக்கள் சற்று தயக்கமான நிலைமையில் இருந்தனர். அவர்களின் அன்றைய தயக்கத்துக்கு ஒரு தெளிவைக் காட்டி இன்று மூவின மக்களும் அவரை பாராட்டும்படி அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளதை நான் இங்கு அதிகம் சொல்லிக்காட்ட வேண்டிய தேவையில்லை.
இவர் முதலமைச்சை எடுக்கும்போது பலரும் பலவாறு கதைத்தார்கள். இவர் இந்த அமைச்சை எவ்வாறு கொண்டு நடத்துவார் இவரின் சேவைகள் மற்றும் இதர நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெறும் என்றெல்லாம் கதைத்தவர்களுக்கு இன்று தெளிவான முறையில் அனைவரும் பாராட்டும் அளவுக்கு இவருடைய சேவைகள் நடைபெற்று வருகின்றது. இவரின் அரசியல் செயற்பாடுகள் யாவும் இலங்கை அரசியலுக்கு பெரும் எடுத்துக்காட்டாகவும், இவரைப்போன்ற நல்ல சேவை செய்யும் மனப்பான்மையுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் திகழவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.